புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கு எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கள் உதவுமா மற்றும் அதற்காக அவற்றை பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

பின்புலம்

எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கள் என்பது அதனை பயன்படுத்துபவர் உள்ளிழுக்கக் கூடிய ஏரோசால் எனப்படும் ஒரு நீராவி பொருளை தயாரிக்கும் மின்சாதனங்கள் ஆகும். இந்த நீராவி, புகை பிடிப்பவர்கள் சிகரெட் புகைக்கும் போது உள்ளிழுக்கக் கூடிய பெரும்பாலான நச்சு பொருள்களைக் கொண்டிராது வெறும் நிக்கோட்டினை மட்டும் கொண்டிருக்கும். புகைத்தலின் அபாயங்களை குறைக்க விரும்பும் புகைப்பிடிப்பவர்கள் மத்தியில் எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கு எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கள் உதவுமா மற்றும் அதற்காக அவற்றை பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்குமா என்பதை அறிய இந்த திறனாய்வு நோக்கம் கொண்டுள்ளது.

ஆய்வு பண்புகள்

இது ஒரு முந்தைய திறனாய்வின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். இதின் முதலாவது திறனாய்வு 2014-ல் வெளியானது. அது 13 ஆய்வுகளை உள்ளடக்கியிருந்தது. இந்த புதுப்பித்தலில், ஜனவரி 2016 வரைக்கும் வெளியான ஆய்வுகளை நாங்கள் தேடி, 11 புதிய ஆய்வுகளை நாங்கள் கண்டோம். சேர்க்கப்பட்ட ஆய்வுகளில், இரண்டு ஆய்வுகள் மட்டுமே சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளாகவும் மற்றும் குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் வரை பின்-தொடர் காலம் கொண்டவையாகவும் இருந்தன. இவை சிறப்பான ஆதாரத்தை அளித்தன. மீதமிருந்த 22 ஆய்வுகள், பங்கேற்பாளர்களை நீண்ட நாட்கள் பின் தொடராமல் அல்லது மக்களை சிகிச்சை குழுக்களுக்கு பிரிக்காமல் இருந்தன. ஆதலால், எலக்ட்ரானிக் சிகரெட்டுக்களை ஏதாவது ஒரு சிகிச்சையோடு நேரிடையாக ஒப்பிட முடியாமல் போனது. புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கு எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கள் உதவுமா என்பதற்கு இந்த ஆய்வுகள் மிக குறைவான தகவலே கூறினாலும், குறுகிய-கால பாதுகாப்பு பற்றிய தகவல் தருபவையாக உள்ளன. நியூசிலாந்து மற்றும் இத்தாலியில் நடத்தப்பட்ட இரண்டு சீரற்ற சோதனைகள் எலக்ட்ரானிக் சிகரெட்டுக்களை நிக்கோட்டின் மற்றும் நிக்கோட்டின் அல்லாது என இரண்டு ஒப்பீட்டுகளை செய்தன. இந்த ஆய்வுகளை நாங்கள் குறைந்த ஒரு தலை-சார்பு அபாயம் கொண்டவை என மதிப்பிட்டோம். ஒரு ஆய்வில், மக்கள் புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கு விரும்பினர், மற்றொரு ஆய்வில் மக்கள் அவ்வாறு விரும்பவில்லை. மக்கள் புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கு விரும்பிய ஆய்வு எலக்ட்ரானிக் சிகரெட்டுக்களை நிக்கோட்டின் ஒட்டுத் துண்டுகளோடும் ஒப்பிட்டது.

முக்கிய முடிவுகள்

நிக்கோட்டின் அல்லாத எலக்ட்ரானிக் சிகரெட்டுக்களுடன் ஒப்பிடுகையில் நிக்கோட்டின் கொண்ட எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கள் நீண்ட-காலக் கட்டத்தில் புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கான சாத்தியங்களை அதிகரித்தன என 662 மக்களை கொண்ட இரண்டு ஆய்வுகளின் கூட்டு முடிவுகள் காட்டின. நிக்கோட்டின் ஒட்டுத் துண்டோடு எலக்ட்ரானிக் சிகரெட்டுக்களை ஒப்பிட்ட ஆய்வில் மிக குறைந்தளவு பங்கேற்பாளர்களே இருந்ததால், நிக்கோட்டின் ஒட்டுத் துண்டை விட எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கள் சிறந்தது என எங்களால் தீர்மானிக்க முடியவில்லை. இந்த விளைவை மதிப்பிட அதிகமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. பிற ஆய்வுகள் குறைந்த தரம் கொண்டவையாக இருந்தன, ஆனால் அவையும் இந்த முடிவுகளை ஆதரித்தன. எலக்ட்ரானிக் சிகரெட்டுக்களை பயன்படுத்தாத புகைப்பிடிப்பவர்களை ஒப்பிடுகையில் குறுகிய-நடுத்தர கால அளவு (2 வருடங்கள் அல்லது அதற்கும் குறைவாக) வரை எலக்ட்ரானிக் சிகரெட்டுக்களை பயன்படுத்திய புகைப்பிடிப்பவர்கள் அதிகமான ஆரோக்கியம் சம்மந்தமான அபாயங்களைக் கொண்டிருந்தனர் என்பதை எந்த ஆய்வுகளும் காணவில்லை.

சான்றின் தரம்

சிறப்பாக நடத்தப்பட்ட ஆய்வுகள் என்றாலும் அவை குறைந்தளவு எண்ணிக்கையின் அடிப்படையிலே இருந்ததால், ஆதாரத்தின் ஒட்டுமொத்த தரம் குறைவாகவே இருந்தது. எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கள் மீது அதிகமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. சிலவை தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்