Skip to main content

இரண்டாம் வகை நீரிழிவு நோயை தடுப்பதற்கான முழு தானிய உணவுகள்

அரிசி, சோளம், கம்பு, ஓட்ஸ் மற்றும் பார்லி (வாற்கோதுமை) போன்ற தானிய பயிர்களிலிருந்து உருவாக்கப்படும் உணவு தயாரிப்புகள் அநேக நாடுகளின் அன்றாட உணவுத் திட்டமுறையில் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கின்றன. சுத்திகரிக்கப்பட்ட-தானிய தயாரிப்புகளில், பெரும்பான்மையான சத்துகள் மற்றும் நார்சத்தை கொண்டுள்ள தவிடு மற்றும் தானியத்தின் நுண்மம் அகற்றப்பட்டு தானியத்தின் மாவுச் சத்து நிறைந்த உட்பகுதி (முழு தானியத்தின் 80% வரை) மட்டும் பயன்படுத்தப்படுகிறது. முழு தானிய உணவுகள், உட்-துகள்கள் அல்லது உடைந்த தானிய பருப்புகள், கரடுமுரடாக அரைக்கப்பட்ட துகள்கள் அல்லது முழு தானிய பயிர்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மாவைக் (முழு தானிய மாவு) கொண்டிருக்கும். இந்த திறனாய்வு, இரண்டாம் வகை நீரிழிவு நோயை தடுப்பதில் முழு தானிய உணவுகள் மற்றும் தானிய பயிறுடைய நார் சத்தின் (முழு-தானிய உணவு உட்கொள்ளலின் ஒரு குறியீடாக) விளைவை கிடைக்கப்பெற்ற அனைத்து எதிர்கால நோக்கான மக்கள் தொகுதி ஆய்வுகள் மற்றும் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளை பயன்படுத்தி மதிப்பீடு செய்தது. குறைந்த செயல்முறையியல் தரத்தை கொண்டிருந்த ஒரே ஒரு சீரற்ற கட்டுப்பாட்டு சோதனை மட்டும் காணப்பட்டது. 12 அதிக உடல் எடை கொண்ட நபர்களில், இன்சுலின் உணர்திறனின் மேல் ஆறு வாரங்களுக்கு சுத்திக்கரிக்கப்பட்ட தானிய உணவுகள் மற்றும் முழு தானிய உணவுகளை உட்கொள்ளலின் விளைவை இந்த ஆய்வு ஆராய்ந்தது. முழு தானிய உணவுகளை உட்கொள்வதால் இன்சுலின் உணர்திறன் லேசாக முன்னேற்றமடைந்தது, குடல் இயக்கங்கள் அதிகரித்தன மற்றும் எந்த பாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை. நோயாளி திருப்தி, ஆரோக்கியம் சார்ந்த வாழ்க்கைத் தரம், ஒட்டுமொத்த இறப்பு மற்றும் நோயுற்ற தன்மை பற்றி எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. கூடுதலாக, பதினோரு எதிர்கால நோக்கான தொகுதி ஆய்வுகள் காணப்பட்டன. ஒரு ஆய்வு பின்லாந்தில் நடத்தப்பட்டது, மற்றவை அனைத்தும் அமெரிக்காவில் நடத்தப்பட்டன, அவற்றில், ஏழு ஆய்வுகள் ஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்களிடம் நடத்தப்பட்டன. சில ஆய்வுகள் குறைந்த தரத்தைக் கொண்டவையாக இருந்தன. அதிகளவில் முழு தானிய உணவுகள் அல்லது தானிய நார்ச்சத்துகள் உட்கொள்ளுவது இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படும் குறைந்த அபாயத்தோடு தொடர்புடையதாக உள்ளதென்று நிலையாக காட்டுகின்றன. எனினும், எதிர்கால நோக்கான தொகுதி ஆய்வுகளின் வடிவமைப் பினால் காரணம் மற்றும் விளைவின் சம்மந்தத்தை நிர்மாணிக்க முடியாததால், எதிர்கால நோக்கான தொகுதி ஆய்வுகளின் ஆதாரத்தை வலுவற்றது என கொள்ள வேண்டும். இறப்பு மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு உருவாகுவதை தடுக்கும் முழு தானிய உட்கொள்ளலின் விளைவுகள் பற்றி உறுதியான முடிவுகளை எடுக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Citation
Priebe M, van Binsbergen J, de Vos R, Vonk RJ. Whole grain foods for the prevention of type 2 diabetes mellitus. Cochrane Database of Systematic Reviews 2008, Issue 1. Art. No.: CD006061. DOI: 10.1002/14651858.CD006061.pub2.