Skip to main content

2ம் வகை வெல்ல நீரிழிவு நோயிற்காக வத்தாளைக் கிழங்கு (சர்க்கரை வள்ளி கிழங்கு)

வத்தாளைக் கிழங்கு ((Sweet potato) (Ipomoea batatus)என்பது வெப்ப வலயம் மற்றும் அதனை அண்டிய பிராந்தியத்தில் காணப்படும் ஒரு தாவரமாக இருப்பதோடு அப் பிரதேசங்களுக்குரிய காய்கறிகளில் மிகவும் சத்துள்ள ஒன்றாகும். ஆசிய பசுபிக், ஆபிரிக்கா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் நாடுகளில் சமையலில் மிகப் பிரசித்தி பெற்றிருப்பதோடு, வத்தாளைக் கிழங்கானது (சர்க்கரை வள்ளி) வெல்ல நீரிழிவு நோய்க்குரிய சிகிச்சையில் ஒரு பாரம்பரிய மருந்தாகவும் உபயோகிக்கப்படுகின்றது. வத்தாளைக் கிழங்கானது நீரிழிவு நோய்க்குரிய சிகிச்சையாகப் பயன்பட முடியுமா என்பதைக் காட்டுவதற்கு மருத்துவப் பரிசோதனைகளிலிருந்து போதுமான ஆதாரம் உண்டா என்பதை ஆய்வு செய்ய நாங்கள் தீர்மானித்தோம். சமவாய்ப்பு கட்டுப்பாட்டு பரிசோதனைகளின் இந்த மீளாய்வு, 2ம் வகை நீரிழிவு நோயில் ஒரு வெற்று மருந்துடன் சர்க்கரை வள்ளி கிழங்கின் பாதிப்பை ஒப்பிட்டு மதிப்பீடு செய்த ஆய்வுகள் மூன்று மாத்திரமே (மொத்தமாக 140 பங்குபற்றுனர்கள்) இருப்பதைக் கண்டறிந்தது. இந்த ஆய்வுகள் அனைத்தும் மிகவும் குறைந்த தரத்தில் இருந்தன. 122 பங்குபற்றுனர்களுடன் செய்யப்பட்ட இரு ஆய்வுகள், நாளொன்றுக்கு 4 கிராம் சர்க்கரை வள்ளி கிழங்கு மாத்திரைகள் வீதம் 3 தொடக்கம் 5 மாதங்கள் வரை வழங்கப்பெற்ற பங்குபற்றுனர்களில் கிளைக்கோசைலேற்றப்பட்ட ஈமோகுளோபின் A1C (Hb A1C) மூலம் அளக்கப்பட்ட குருதி வெல்ல அளவின் நீண்டகால வளர்சிதைமாற்ற கட்டுப்பாடு மேம்பட்டு இருந்ததைக் காட்டியது.இவர்களிடம் குருதி வெல்ல அளவு 0.3% மிதமான அளவு குறைக்கப்பட்டு காணப்பட்டது. தொடர் கண்காணிப்பு காலம் 6 வாரம் முதல் 5 மாதங்கள் வரை இருந்தது. நீரிழிவு நோயின் பாதிப்புக்கள், ஏதேனும் காரணத்தினால் ஏற்படும் இறப்புக்கள், ஆரோக்கியம்சார் வாழ்க்கைத்தரம், சௌபாக்கியம், செயல்பாடு விளைவுபயன் அல்லது செலவு பற்றி எந்தவொரு ஆய்வும் ஆராயவில்லை. எதிர்மறையான விளைவுகள், பெரும்பாலும் அடிவயிறு விரிவடைதல் மற்றும் வலி போன்ற லேசானவையாகவே இருந்தன. பல வகையான வத்தாளைக் (சர்க்கரை வள்ளி) கிழங்குகள் மற்றும் வத்தாளைக் கிழங்குத் தயாரிப்புக்கள் உள்ளன. பல்வேறுபட்ட வத்தாளைக் கிழங்குத் தயாரிப்புக்களின் தரம் பற்றி அறியவும், நீரிழிவு நோயாளர்களின் உணவில் வேறுபட்ட வகையான வத்தாளைக் கிழங்குகளின் பயன்பாடு பற்றி மேலதிக மதிப்பீடு செய்யவும் மென்மேலும் ஆய்வுகள் தேவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பு: த. சஞ்சயன் மற்றும் சி.இ.பி.ஏன்.அர்

Citation
Ooi CP, Loke SC. Sweet potato for type 2 diabetes mellitus. Cochrane Database of Systematic Reviews 2013, Issue 9. Art. No.: CD009128. DOI: 10.1002/14651858.CD009128.pub3.