Skip to main content

ஐந்து முதல் பதினோரு வயது கொண்ட குழந்தைகளில், குழந்தைப்பருவ அதிக உடல் எடை அல்லது உடல் பருமனிற்கு பெற்றோருக்கு மட்டுமான சிகிச்சை தலையீடுகள்

திறனாய்வு கேள்வி

குழந்தைகளில், அதிக உடல் எடை அல்லது உடல் பருமனை குறைப்பதில், பெற்றோருக்கு வழங்கப்பட்ட உணவு முறை, உடல் இயக்க நடவடிக்கை மற்றும் நடத்தை சார்ந்த சிகிச்சை தலையீடுகள் எந்தளவு திறன் கொண்டுள்ளன?

பின்புலம்

உலகம் முழுதும், அதிகமான குழந்தைகள் அதிக உடல் எடை உடையவர்களாக அல்லது பருமனாக ஆகிக் கொண்டு வருகின்றனர். இந்த குழந்தைகள், குழந்தை பருவத்திலும் மற்றும் எதிர்கால வாழ்க்கையிலும், ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படுவதற்கு அதிக சாத்தியமுள்ளது. பெற்றோர், தங்கள் குழந்தைகள் என்ன சாப்பிடலாம் என்பதை தீர்மானிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றனர். பெற்றோர்கள், அவர்களின் குடும்ப உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்த அவர்களுக்கு உதவுவது இந்த பிரச்சனைக்கு தீர்வளிக்குமா என்பது பற்றி அதிகமான விவரம் தேவைப்படுகிறது.

ஆய்வு பண்புகள்

ஐந்து முதல் பதினோரு வயது கொண்ட குழந்தைகளின் பெற்றோருக்கு மட்டுமான உணவு முறை, உடல் இயக்க நடவடிக்கை மற்றும் நடத்தை சார்ந்த சிகிச்சை தலையீடுகளை (பழக்கங்களை மாற்றுதல் அல்லது மேம்படுத்துதல்), பலவிதமான கட்டுபாடு குழுக்களோடு (எந்த சிகிச்சையும் பெறாதவர்கள்) ஒப்பிட்ட இருபது சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளை (இரண்டு அல்லது அதற்கும் மேலான சிகிச்சை குழுக்களில் சீரற்ற முறையில் மக்கள் ஒதுக்கீடு செய்யப்படும் மருத்துவ ஆய்வுகள்) நாங்கள் கண்டோம். பயன்படுத்தப்பட்ட சிகிச்சை தலையீடுகளின் தன்மை மற்றும் வகைகளில், சோதனைகளிடையே மிக குறைந்த ஒற்றுமைகள் இருந்தன. சோதனைகளை, ஒப்பீடுகளின் வகைப்படி நாங்கள் பிரித்தோம். பெற்றோர் மற்றும் குழந்தைக்கான சிகிச்சை தலையீடுகள், காத்திருப்போர் பட்டியல் கட்டுப்பாட்டு குழுக்கள் (சோதனையின் முடிவு வரை தாமதிக்கப்பட்ட சிகிச்சை தலையீடு), மற்றும் குறைந்த அளவு விவரம் அல்லது தொடர்பை கொண்டிருந்த பிற சிகிச்சை தலையீடுகள் மற்றும் பிற வகையான பெற்றோருக்கு-மட்டுமான சிகிச்சை தலையீடுகளோடு ஒப்பிடப்பட்ட பெற்றோருக்கு-மட்டுமான சிகிச்சை தலையீடுகளின் விளைவுகளை பற்றி நமது முறைப்படுத்தப்பட்ட திறனாய்வு அறிக்கையளிக்கிறது. சேர்க்கப்பட்டிருந்த சோதனைகளில் உள்ள குழந்தைகள், ஆறு மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை கண்காணிக்கப்பட்டனர் (பின்-தொடர்தல் என்று அழைக்கப்படும்). இந்த ஆதாரம் மார்ச் 2015 வரை தற்போதையது.

முக்கிய முடிவுகள்

உடற் நிறை குறியீட்டு எண் (பாடி மாஸ் இன்டெக்ஸ், பிஎம்ஐ) மிக அதிகமாக அறிக்கையிடப்பட்ட விளைவாக இருந்தது. இது உடல் எடையை (கிலோ கிராமில்), மீட்டரில் அளவிடப்பட்ட உடல் உயரத்தின் இருபடி வர்க்கத்தால் வகுத்து மதிப்பிடப்படுகிறது (கிலோ கிராம்/மீட்டர் 2) மற்றும் இது உடல் கொழுப்பின் ஒரு அளவீடாகும்.வளரும் குழந்தைகளாதலால், பாலினம், எடை மற்றும் உயரம் ஆகியவற்றை கணக்கில் கொண்ட வழிகள் (பிஎம்ஐ z எண்ணிக்கை மற்றும் பிஎம்ஐ சதமானம் போன்றது) மூலம் பிஎம்ஐ-யை ஆய்வுகள் அளவிட்டன.

காத்திருப்போர் பட்டியல் கட்டுப்பாட்டுடன் ஒப்பிட்ட போது, பெற்றோருக்கு மட்டுமான சிகிச்சை தலையீடுகள் பிஎம்ஐ-யை குறைப்பதற்கு உதவின என்பதற்கு வரம்பிற்குட்பட்ட ஆதாரம் உள்ளது. சேர்க்கப்பட்டிருந்த சோதனைகளில் இருந்த நீண்ட கால பின்-தொடர் காலவரைகளை பார்க்கும் போது, பெற்றோர் மற்றும் குழந்தைக்கான சிகிச்சை தலையீடுகள், அல்லது குறைவான விவரத்தோடு ஒப்பிடுகையில், பெற்றோருக்கு-மட்டுமான சிகிச்சை தலையீடுகளின் அனுகூலம் அல்லது அனுகூலமின்மைக்கான திடமான ஆதாரத்தை நாங்கள் காணவில்லை. எவ்வாறு வெவ்வேறு வகையான பெற்றோர் சார்ந்த சிகிச்சை தலையீடுகள் ஒப்பிடப்பட்டன என்பது பற்றி மிக குறைந்தளவு விவரத்தை எங்கள் திறனாய்வு கண்டது. எந்த காரணத்தினாலும் ஏற்பட்ட மரணத்தை, உடல் நல குறைவு அல்லது சமூக-பொருளாதார விளைவுகள் (பெற்றோர் மற்றும் குழந்தைக்கான சிகிச்சை தலையீடுகள் பெற்றோருக்கு மட்டுமான சிகிச்சை தலையீடுகளை விட குறைந்த செலவுடையதா போன்ற) பற்றி எந்த சோதனையும் அறிவிக்கவில்லை. ஆபத்தான எந்த பக்க விளைவுகளும் இல்லை என்று இரண்டு சோதனைகள் அறிவித்தன; மற்றும் பிற மீதமிருந்த சோதனைகள் பக்க விளைவுகள் நேர்ந்தனவா அல்லது இல்லையா என்பது பற்றி அறிவிக்கவில்லை. பெற்றோர்-குழந்தை உறவுமுறைகள் மற்றும் ஆரோக்கியம்-சார்ந்த வாழ்க்கைத் தரம் பற்றிய விவரம் மிக அரிதாக அறிக்கையிடப்பட்டன.

சான்றின் தரம்

ஒவ்வொரு அளவீட்டிற்கும் மிக குறைந்த சோதனைகள், அல்லது சேர்க்கப்பட்டிருந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த முக்கிய காரணத்தினாலும், ஆதாரத்தின் ஒட்டுமொத்த தரம் குறைவாக இருந்தது, கூடுதலாக, சோதனைகளை முடிப்பதற்கு முன்னதாகவே அதிக குழந்தைகள் வெளியேறினர்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Citation
Loveman E, Al-Khudairy L, Johnson RE, Robertson W, Colquitt JL, Mead EL, Ells LJ, Metzendorf M-I, Rees K. Parent-only interventions for childhood overweight or obesity in children aged 5 to 11 years. Cochrane Database of Systematic Reviews 2015, Issue 12. Art. No.: CD012008. DOI: 10.1002/14651858.CD012008.