நாட்பட்ட கீழ்முதுகுவலிக்கான முதுகு மூட்டு இழுத்துப்பொருத்தல் (Spinal Manipulative therapy )

உலகம் முழுவதும் வெவ்வேறு மருத்துவத்துறைகளைச் சார்ந்த சிகிச்சையாளர்களால் முதுகு மூட்டு இழுத்துப்பொருத்தல் (Spinal Manipulative therapy) சிகிச்சையளிக்கப்படுகிறது. நாட்பட்ட கீழ்முதுகுவலிக்கான சிகிச்சையில் இவ்வகையான சிகிச்சையின் பயன்கள் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

தனிமனிதனுக்கும், சமூகத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கீழ்முதுகுவலியானது மிகவும் பொதுவான, உடலையே முடக்க கூடிய ஓர் பிறழ்ச்சியாகும். இது பெரும்பாலும் வாழ்க்கைதரம் குறைவு, வேலைக்கு போகும் நாட்களிழப்பு மற்றும் கணிசமான மருத்துவ செலவுகளை விளைவிக்கின்றது. இந்த திறனாய்வில் 12 வாரங்களுக்கு மேற்பட்ட கீழ்முதுகுவலியை, நாட்பட்ட கீழ்முதுகுவலி என வரையறுக்கப்பட்டுள்ளது. தெரிந்த காரணங்களுடைய பாதிப்புகளால் ஏற்படும் கிழ்முதுகுவலி, உதாரணமாக தொற்று(Infection),கட்டி (Tumor),அல்லது எலும்பு முறிவு (Fracture) போன்றவற்றை நாங்கள் இவ்வாய்வில் எடுத்துக் கொள்ளவில்லை. முக்கியமாக கிழ்முதுகில் ஏற்படும் வலி மற்றும் பிட்டம், கால்களுக்கு பரவும் வலியுடைய நோயாளிகள் இவ்வாய்வில் நாங்கள் சேர்த்தோம்.

SMT என்பது கைகளைக் கொண்டு முதுகெலும்பில் செய்யப்படும் செய்முறைச் சிகிச்சை. இதில் கையாளல் சிகிச்சையும் (Manipulation), புறவிசையியக்க மூட்டசைவு சிகிச்சையும்(Mobilisation) அடங்கும். கைகளைக் கொண்டு செய்யப்படும் புறவிசையியக்க மூட்டசைவு சிகிச்சையில், சிகிச்சையாளர் நோயாளியின் முதுகெலும்பின் மூட்டுக்களை அதன் அசைவிற்கான எல்லைக்குள் (Range of motion) அசைப்பார். சிகிச்சையாளர்கள் குறுகிய எல்லைக்குள்ளடங்கிய அசைவுகளில் துவங்கி, கொஞ்சம் கொஞ்சமாக அகன்ற எல்லைக்குள் செல்லும் மெதுவான, புறவிசையியக்க அசைவுகளை (Passive movement) உபயோகிப்பார்கள்.கைகளால் இழுத்துப் பொருத்தல் சிகிச்சை என்பது புறவிசை மூலம் அளிக்கப்படும் உத்தியாகும், இதில் சிகிச்சையாளர் குறிப்பிட்ட திசை நோக்கி செலுத்தபட்ட திடீர் விசை (Manual impulse) அல்லது உந்து விசையை (Thrust) மூட்டுகளின் வழக்கமான அல்லது வழக்கத்திற்கு மேலான முடிவு எல்லையில் அல்லது எல்லைக்கருகில் கொடுப்பார்.இந்த உத்தியின் செயல், பெரும்பாலும் ஒரு கேட்கத்தக்க வெடிப்பு சத்தத்துடன் (Audible crack) இணைந்திருக்கும்.

இப்புதுப்பிக்கப்பட்ட திறனாய்வில், நாட்பட்ட கீழ்முதுகுவலியுடைய நோயாளிகளுக்கு SMT சிகிச்சையால் ஏற்படும் விளைவுப்பயன்களை சோதித்த 6070 பங்கேற்பாளர்களையுடைய 26 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளை கண்டறிந்தோம். இந்த சிகிச்சை கைரோப்ரக்டர் (Chiropractors), கை முறை சிகிச்சையாளர்கள் (Manual therapist) மற்றும் ஒஸ்டிஒபெத்ஸ் (Osteopaths) போன்ற பல்வேறு சிகிச்சையாளர்களால் (Practitioners) alikkappattadhu .ஒன்பது ஆய்வுகளில் மட்டுமே குறைந்த ஒருதலைப்பட்சத்துக்கான அபாயம் (Low risk of bias)உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, இவற்றின் முடிவுகளில் நாம் கொஞ்சம் நம்பிக்கை வைக்கலாம்.

இந்த திறனாய்வுரையின் முடிவுகள், SMT சிகிச்சையின் பலன்கள் மற்ற சிகிச்சை முறைகளான உடற்பயிற்சி சிகிச்சை, பொதுவான மருத்துவ சிகிச்சை(Standard medical care) அல்லது இயன்முறை சிகிச்சையின் பலன்களுக்கு இணையாகவே இருக்கிறது என காட்டுகிறது.இருப்பினும், செயல்திறனற்ற சிகிச்சை முறைகள் அல்லது போலியான (Sham/Placebo) சிகிச்சையோடுSMT சிகிச்சையின் பயன்களை , அதிகமான ஒருதலைப்பட்ச அபாயமுடைய (High risk of bias) சில ஆய்வுகளில் மட்டுமே ஒப்பிட்டமையால் அதனை பற்றி சரியான தெளிவில்லை. மூன்றில் இரண்டுபங்கு ஆய்வுகளில் அதிக ஒருதலைபட்சமான ஆபத்து இருப்பதினால், நம்மால் முடிவுகளை உறுதியாக ஏற்றுகொள்ள இயலாது. மேலும, SMT சிகிச்சை முறைகளால் தீவிரமான பின்விளைவுகள் ஏதும் கண்டறியப்படவில்லை.

சுருக்கமாக, சொன்னால், SMT சிகிச்சை நாட்பட்ட கீழ்முதுகுவலியுடைய நோயாளிகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள சிகிச்சை முறைகளைவிட சிறப்பானதாகவோ அல்லது பாதிப்புகளை எற்படுத்துவதாகவோ கண்டறியப்படவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: மோகனகிருஷ்ணன் ஜெகதேவன், பானுமதி மோகனகிருஷ்ணன், சலஜா . இரா, ஜெபராஜ் பிளட்சர். அ. ச மற்றும் சி.இ.பி.என்.அர் குழு.

Tools
Information