2ம் வகைவெல்ல நீரிழிவு நோய்த் தடுப்பிற்காக நாகச்சத்து குறைநிரப்பு வழங்கல்

திறனாய்வு கேள்வி

இன்சுலின் எதிர்ப்புக் (Insulin resistance) கொண்ட வயதுவந்தோரில் 2ம் வகை வெல்ல நீரிழிவு நோயின் தடுப்பில் வெற்றுமருந்துடன் சிகிச்சை பெறல் அல்லது சிகிச்சை எதுவுமின்றி இருத்தலுடன் ஒப்பிடும் போது நாகச்சத்து குறைநிரப்பு வழங்கல் (Zinc supplementation) என்ன பாதிப்புக்களைக் கொண்டுள்ளது?

பின்புலம்

நீரிழிவு நோயாளர்களில் குளுக்கோசு மட்டங்களை (கிளைசீமிக் கட்டுப்பாடு) நாகம் மேம்படுத்துவதாக சில ஆய்வுகள் காட்டியுள்ளன. நீரிழிவு நோயின் விளைவாக நீண்டகாலப் பாதிப்புக்களான சிறுநீரகம், நரம்பு மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். அத்துடன் மாரடைப்பு மற்றும் பாரிசவாதம் போன்ற இருதய-குருதிக்கலன் சார் பாதிப்புக்களின் ஆபத்தும் அதிகரித்துக் காணப்படுகின்றது. 1ம்வகை நீரிழிவு நோயானது உடலால் இன்சுலினை இனிமேலும் உற்பத்தி செய்ய முடியாத போது ஏற்படுகின்ற நீரிழிவு நோயாகும். 2ம்வகை நீரிழிவு நோய் தோன்றும் ஆபத்தானது வயது, உடற்பருமன் மற்றும் உடற்பயிற்சிக்குறைவு ஆகியவற்றோடு அதிகரிப்பதோடு, உடலினால் இன்சுலினை உபயோகப்படுத்தும் ஆற்றல் அற்ற தன்மையின் அதிகரிப்பால் (Insulin resistance) அறியப்படுகின்றது. நாகம் என்னும் கனியமானது இன்சுலினின் தொழிற்பாட்டில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிப்பதோடு, கொள்கையளவில் இன்சுலின் எதிர்ப்புள்ள மக்களில் பாவிக்கப்படுகின்ற நாகச்சத்து குறைநிரப்பு வழங்கலானது நீரிழிவு நோய் ஏற்படுவதைத் தடுக்கக் கூடும்.

ஆய்வு பண்புகள்

நாங்கள் மொத்தமாக 128 பங்கேற்பாளர்களை கொண்ட மூன்று சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளை இம் திறனாய்வில் பயன்படுத்தினோம். நாகச்சத்து குறைநிரப்பு வழங்கலின் காலப்பகுதியானது நான்கிலிருந்து 12 கிழமைகள் வரையில் வேறுபட்டுக் காணப்பட்டது.

பிரதான முடிவுகள்

எந்த ஆய்வும் எமது நோயாளர்சார் முக்கிய வெளியீடுகளை (முதிதாகத் தோன்றிய 2ம்வகைநீரிழிவுநோய், பக்க விளைவுகள், ஆரோக்கியம்சார் வாழ்க்கைத்தரம், அனைத்துவிதமான இறப்புக்கள், நீரிழிவுப் பாதிப்புக்கள், சமூகபொருளாதார பாதிப்புக்கள்) அறிக்கையிடவில்லை. இன்சுலின் எதிர்ப்பு மற்றும் குருதி இலிப்பிட்டு மட்டம் (பிரதானமாக கொலஸ்திரோல் மற்றும் மூகிளிசரைட்டுக்கள்) என்பவற்றைப் பொறுத்தவரை நாகச்சத்து குறைநிரப்பு வழங்கலின் பாதிப்புக்கள் நிச்சயமற்றதாகக் காணப்பட்டன.

சான்றின் தரம்

ஆய்வு ஆசிரியர்கள் அவ் ஆய்வுகள் எவ்வாறு நடாத்தப்பட்டன என்பதை நிச்சயிப்பதற்கு எமக்கு முக்கிய தகவல்களை வழங்காத காரணத்தினால் (பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தெளிவற்ற வழுபற்றிய ஆபத்து காணப்பட்டது) இம் மீளாய்வில் உள்ளடக்கப்பட்ட ஆய்வுகளின் ஒட்டுமொத்த தரமானது தெளிவற்றுக் காணப்பட்டது. அத்துடன் ஆய்வுகளின் மற்றும் பங்குபற்றுனர்களின் எண்ணிக்கையானது குறைவாக இருந்ததோடு, புதிதாக ஏற்பட்ட 2ம்வகை வெல்ல நீரிழிவு நோய் அல்லது நாகச்சத்து குறைநிரப்பு வழங்கலின் பக்க விளைவுகள் போன்ற முக்கிய வெளியீடுகளை ஆய்வு ஆசிரியர்கள் ஆராயவில்லை.

சான்றுகளின் நிகழ்காலதன்மை

இச் சான்றானது பங்குனி 2015 வரையிலான ஆய்வுகளை உள்ளடக்கியுள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: த. சஞ்சயன்

Tools
Information