வலிப்பு நோய்க்கு யோகா

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

வலிப்பு நோயை கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சை முறையாக யோகாவின் பயன்பாட்டை இவ்வாய்வு ஆராய்கின்றது.

வலிப்பு நோய் என்பது மூளையில் ஏற்படும் இயல்பு மீறிய மின்னிறக்கத்தால் அடிக்கடி ஏற்படும் வலிப்பு தாக்கமாகும்(Seizure). பெரும்பாலான வலிப்பு தாக்கங்களை , வலிப்பை கட்டுப்படுத்தும் மருந்துகள் (Anti - Epileptic Drugs ) மூலம் தணிக்க இயலும். ஆனால், சில வேளைகளில் அம்மருந்துகளுக்கு எதிர்ப்பு தன்மையுள்ள வலிப்பு தாக்கங்களும் ஏற்படலாம். மருந்தில்லா சிகிச்சை முறையான யோகா போன்றவற்றையும் பாதிக்கப்பட்டோர் செய்ய விரும்புவர். வலிப்பை கட்டுப்படுத்தும் மருந்துகளால் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களை, மற்ற விதமான நாள்பட்ட நோய்களோடு ஒப்பிடுகையில் வலிப்பு நோய்க்கு மருந்து சிகிச்சை எடுத்து கொண்டோரில் சுமார் 25% இருந்து 40 % பேருக்கு வலிப்பு நோய் கட்டுக்குள் வரவில்லை என்பதுடன் அவர்கள் மருந்து உட்கொள்வதன் எதிர் விளைவுகளையும் அனுபவித்தனர். தம்மீது மாசு ஏற்பட்டதாய் உணர்ந்து அல்லல் பட்டதோடு அதிகமாக மனநல கோளாறுகளினாலும் பாதிக்கப்பட்டிருந்தார்கள் வலிப்பு நோய் மற்றும், அதைச் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டோருக்கான அன்றாட சிகிச்சையில் ஒரு குறை நிரப்பு சிகிச்சை மாதிரியை (Complementary treatment model) மேம்படுத்தி, மதிப்பிட்டு, செயல்படுத்துவது மிகவும் இன்றியமையாதது ஆகும்.

இந்திய பண்பாடு மற்றும் பாரம்பரியத்தின் அங்கமான யோகா, அதை செயல்படுத்துபவர்களின் உடல், மனம் மற்றும் அக நிலை சார்ந்த நலத்தை பேணுவதாக கருதப்படுகின்றது. நிலுவைய பயிற்சிகள் (ஆசனங்கள்),மூச்சு கட்டுபாட்டு பயிற்சிகள் (பிரணாயமா) மற்றும் உடல் உளத்தளர்வு பயிற்சி (தியானம்) போன்ற பல வகையான யோகா பயிற்சிகள் உள்ளன. ஓர் ஆய்வு , சஹஜ யோகா(Sahaja yoga) என்ற எளிய வகையான உடல் உளத்தளர்வு பயிற்சி,வலிப்பு நோயுடையவர்களின் வலிப்பு தாக்கங்களை குறைப்பதாகவும்,மூளையில் ஏற்படும் மின்னிறக்க மாற்றங்களை (EEG) குறைப்பதாகவும் குறிப்பிடுகின்றது. இவ்வகையான உடல் உளத்தளர்வு பயிற்சிகளின் விளைவாக உடல் அழுத்த அளவுகள் (Stress levels)குறைவதாக கருதப்படுகின்றது. தோற்றடை (Skin resistance), இரத்தத்தில் உள்ள லேக்டேட் அளவு(Blood lactate levels) மற்றும் சிறு நீரிலுள்ள வேனிலில் மெண்டலிக் அமிலத்தின்(Urinary vanillyl mendelic acid)அளவு போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன.

இவ்வாய்வில், இரண்டு மறைப்பற்ற சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளில் (Unblinded Randomised controlled trials), 50 மருந்துக்கு மசியாத வலிப்பு நோய் (Refractory epilepsy) உடைய பங்கேற்பாளர்களுக்கு மரபார்ந்த இந்திய யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டு , அவர்கள் சிகிச்சைகள் இல்லாத அல்லது யோகா போன்ற பயிற்சிகள் (Yoga mimicking exercises) அல்லது ஏற்பு மற்றும் உறுதியளிப்பு சிகிச்சைகளை (Acceptance and commitment therapy) மேற்கொண்ட கட்டுப்பாட்டு குழுவினரோடு ஒப்பாய்வு செய்யப்பட்டனர். எல்லா பங்கேற்ப்பாளர்களுக்கும் வலிப்பு நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் தொடர்ந்து அளிக்கப்பட்டது.

வலிப்பு தாக்கத்தில் இருந்து விடுபட்டோரின் சதவிகிதம், வலிப்பு தாக்கத்தின் கால அளவு (Duration of seizure) மற்றும்வலிப்பு தாக்கம் அடுத்தடுத்து நிகழும் நிலை (frequency ), பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கை தரம் (Quality of Life ) போன்றவை சிகிச்சை விளைவு பலன்களை மதிப்பிட்டோம் யோகா பயிற்சிகள் மற்ற சிகிச்சைகளை விட பலன் அளிப்பதாக ஆய்வு முடிவுகள் குறிப்பிட்டாலும், கட்டுக்கடங்கா வலிப்பு நோய்க்கான (Uncontrolled epilepsy) சிகிச்சை முறையாக யோகா பயிற்சிகளை மேற்கொள்ள நம்பத்தக்க சான்றுகளை இவ்வாய்வு கண்டறியவில்லை. யோகா மேற்கொண்ட குழுவின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டதாக வாழ்க்கை மனநிறைவு அளவீடு(Satisfaction with life scale) மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.

நோக்காளர் மறைப்பு (Blinding) மூலம் நோக்காளர் சார்ந்த ஒரு தலைப்பட்சமான முடிவுகளைக் (Observer bias)குறைக்கலாம். நோக்காளர் மறைப்பு (blinding) ஆய்வில் பங்கு கொள்ளாத மருத்துவர்மூலம் விளைவு பயன்களை அளவிடுவதால் ஏற்படுத்த இயலும். பங்கேற்பாளர் மறைப்பை(Participant blinding) ஏற்படுத்துவது மிகவும் கடினம் ஏனெனில் பங்கேற்பாளர் யோகா குழுவில் உள்ளாரா இல்லையா என்பதை கண்டறிவது மிகவும் எளிது. வலிப்பு தாக்கம் சார்ந்த தரவுகளை மறைக்கப்பட்ட நோக்காளர்(Blinded Observer) மூலம் அளவிடுவது சிறந்ததாகும். வலிப்பு தாக்கம் அடுத்தடுத்து நிகழும் நிலை (frequency)யின் சராசரி மதிப்பை அளவிடுவது மிகவும் கடினம் என்பதால், வலிப்பு தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் பாதிப்பை சதவிகித அளவுகளில் அளவிடுவது சிறந்ததாகும். மேலும் வலிப்புதாக்கம் அடுத்தடுத்து நிகழும் நிலைகளைக் கணக்கிட வலிப்புதாக்கமற்ற அல்லது விகித அளவுகளில் 50% அதிகமாக குறைவுப்பட்ட வலிப்பு தாக்கங்கள் என்று கணக்கிடலாம். வலிப்பு தாக்கத்தின் கால அளவு நொடிகள் அல்லது நிமிடங்களில் (ஒரு முறைக்கு அல்லது ஒரு மாதத்திற்கு) கணக்கிடலாம். நோய் சார்ந்த வாழ்க்கை தரத்தின் அளவீடுகள், இடையீடுகளினால் வலிப்புத்தாக்கதைக் கட்டுப்படுத்துவதோடு வலிப்பு நோயுடையோரின் வாழ்க்கை தரத்தில் ஒட்டுமொத்த மேம்பாடு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய இயலுமா என்பதையும் தெரியப் படுத்தலாம்.

யோகாவை வலிப்பு நோயிற்கான முதன்மை சிகிச்சை முறையாக கொள்ள நம்பகமான முடிவுகள் எதுவும் தற்போது கண்டறியப்படவில்லை. மேலும், யோகாவினால் ஏற்படும் விளைவு பயன்களைக் கண்டறியும் வழி வகைகள் குறைவாகவும், தரம் தாழ்ந்தவையாகவும் உள்ளன. மற்ற வகையான மாற்று சிகிச்சை முறைகளைப் போன்றே யோகாவும் பல பாகங்களைக் கொண்ட சிகிச்சையாக கருதப்படுகின்றது. தற்போது, வலிப்பு நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகளுடன் கூடுதலாக அளிக்கப்படும் சிகிச்சையாக மட்டுமே யோகா இருக்க முடியும்.வலிப்பு நோயிற்கான முதன்மை சிகிச்சை முறையாக யோகாவைப் பயன்படுத்த இயலாது. இறுதியாக, யோகாவை பயன் படுத்துவதற்கான நம்பகமான சான்றுகள் ஏதும் இல்லை. மேலும், பல ஆய்வுகள் தேவை படுகின்றன

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: மோகனகிருஷ்ணன் ஜெகதேவன், பானுமதி மோகனகிருஷ்ணன், சலஜா . இரா, ஜெபராஜ் பிளட்சர். அ. ச மற்றும் சி.இ.பி.என்.அர் குழு.