கர்ப்பக் காலத்தில் ஆஸ்துமாவை மேலாண்மை செய்வதற்கான ​தலையீடுகள்

ஆஸ்துமா, கர்ப்பக் காலத்தில், எட்டு பெண்களில் ஒருவர் வரைக்கும் சுவாச அமைப்பை (நீங்கள் சுவாசிக்க உதவும் உறுப்புகள்) பாதிக்கும் மிகவும் பொதுவான நோயாகும். கர்ப்பக் காலத்தில் ஆஸ்துமா மேம்படலாம், மோசமாகலாம் அல்லது மாறாமல் இருக்கலாம். மோசமாக கட்டுப்படுத்தப்பட்ட ஆஸ்துமா, தாய்மார்களில் முன்சூல்வலிப்பு (உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் புரதம்), கர்ப்பக்கால நீரிழிவு (உயர் இரத்த குளுக்கோஸ்) மற்றும் சிசேரியன் பிறப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சிக்கல்களுக்கு வழிவகுக்கும்; குழந்தைகளுக்கான சிக்கல்களில், மரணம், குறைமாத பிரசவம் (37 வார ​ கர்ப்பக் காலத்திற்கு ​முன்னர்) மற்றும் குறைந்தளவு பிறப்பு எடை ஆகியவை அடங்கும். திறன்வாய்ந்த மேலாண்மை மற்றும் கடும் விளைவுகளை தடுப்பது உட்பட கர்ப்ப காலத்தில் ஆஸ்துமாவில் போதுமான கட்டுப்பாட்டை பராமரிப்பதே மேலாண்மையின் குறிக்கோள் ஆகும். பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் மருந்துகள் எடுப்பதின் ஆபத்துக்களைப் பற்றிய கவலை இருக்கலாம், மற்றும் மேலாண்மை உத்திகளைப் பற்றி அவர்களின் ஆரோக்கிய தொழில்சார் வல்லுனர்கள் நிச்சயமற்று இருக்கலாம்.

கர்ப்பக் காலத்தின் ஆஸ்துமா மேலாண்மையில் வெவ்வேறான தலையீடுகள் எவ்வளவு ஆற்றல் வாய்ந்ததாகவும் மற்றும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்பதை மதிப்பிட இந்த திறனாய்வு நோக்கம் கொண்டது. 1181 பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் சம்பந்தப்பட்ட எட்டு சீரற்ற சமவாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளை எங்களால் உள்ளடக்க முடிந்தது. ஒட்டுமொத்தமாக, பரிசோதனைகள் மிதமான தரத்தில் இருந்தன. ஐந்து சோதனைகள் மருந்துகளை மதிப்பீடு செய்தன. உள்ளிழுக்கப்படும் மெக்னீசியம் சல்பேட் கடுமையான ஆஸ்துமா கொண்ட பெண்களில் ஆஸ்துமா மேலும் தீவிரமாவதைக் குறைப்பதற்கு உதவி செய்தது, மற்றும் அவர்களின் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவியது (தெளிவற்ற தரம் கொண்ட ஒரு சோதனை, 60 பெண்கள்). நிலையான ஆஸ்துமா கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு தொடர்ந்து நடைபெறும் சிகிச்சையில், ஆஸ்துமாவின் தீவிர பெருக்கத்தின் மேல் உள்ளிழுக்கப்படும் கார்ட்டிக்கோஸ்டீராய்டுகளின் விளைவு பற்றி தெளிவாக இல்லை (இரண்டு சோதனைகள், 155 பெண்கள்; ஆனால் தரவு ஒரு சோதனையிலிருந்து (60 பெண்கள்) தான் பகுப்பாய்வு செய்யப்பட்டது); உள்ளிழுக்கப்படும் கார்ட்டிக்கோஸ்டீராய்டுகளை வாய்வழி மூலம் உட்கொள்ளும் தீயோபிலினோடு ஒப்பிடுகையில் தீவிர பெருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பில் எந்த வித்தியாசமும் காணப்படவில்லை. எனினும், தீயோபிலின் பெற்ற அதிக பெண்கள் பக்க விளைவுகள் காரணமாக சிகிச்சையை நிறுத்திக் கொண்டனர் (ஒரு சோதனை, 385 பெண்கள்). மூன்று சோதனைகள் மருந்து-அல்லாத தலையீடுகளை மதிப்பிட்டன. பெண்கள் எவ்வளவு நைட்ரிக் ஆக்ஸைடை வெளி விடுகின்றனர் (வெளி விடப்பட்ட நைட்ரிக் ஆக்ஸைடின் கூறு (ப்ரக்க்ஷன் ஆப் எக்ஷ்ஹலெட் நைட்ரிக் ஆக்ஸைட், பெனோ) என்பதற்கேற்ப ஆஸ்துமா மருந்துகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் தீவிர பெருக்கங்கள் குறைந்து மற்றும் வாழ்க்கைத் தரம் மேம்பட்டது என்று காட்டப்பட்டது (ஒரு சோதனை, 220 பெண்கள்). பெண்களின் நுரையீரல் செயல்பாடு மற்றும் வாழ்க்கை தரத்தை படிப்படியான தசை தளர்வு மேம்படுத்தியது (ஒரு சோதனை, 64 பெண்கள்), மற்றும் மருந்தாளுநர் தலைமையேற்று நடத்தின ஆஸ்துமா மேலாண்மை, ஆஸ்துமா கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவியது (ஒரு சோதனை, 60 பெண்கள்).

சில தலையீடுகள் நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக, கர்ப்பக் காலத்தில் ஆஸ்துமாவை நிர்வகிக்க சிறந்த வழியை உறுதியோடு சொல்ல சீரற்ற சம வாய்ப்பு சோதனைகளிருந்து நன்மைகள் மற்றும் பாதிப்புகள் பற்றிய போதுமான ஆதாரங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தைகளுக்கு, அவர்கள் குழந்தை பருவத்தில் இருந்து வயது வந்த பருவம் வரையான நீண்ட-கால விளைவுகள் உட்பட தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் முக்கியமான ஆரோக்கிய விளைவுகளை பற்றி அறிக்கையளிப்பதற்கான பெரிய, அதிக தரமுள்ள சோதனைகள் நமக்கு வேண்டும். கர்ப்பக் காலத்தில் ஆஸ்துமாவிற்கான தலையீடுகளை மதிப்பிட ஐந்து சோதனைகள் தற்போது திட்டமிட்டப்பட்டுள்ளது அல்லது நடைப்பெறுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information