பக்கவாதத்தின் நீண்ட-கால விளைவுகளைக் கொண்ட மக்களுக்கான சுய-மேலாண்மை திட்டங்கள்

திறனாய்வு கேள்வி

பக்கவாதம் கொண்ட மக்களுக்கான சுய-மேலாண்மை திட்டங்களின் விளைவுகள் என்ன?

பின்புலம்

பக்கவாதம் என்பது மூளையின் பகுதிகளுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதினால் உண்டாகும். இது, மக்களின் வாழ்க்கையை முற்றிலுமாக பாதித்து, அவர்கள் சுயமாக வாழும் திறன் மற்றும் அதன் தரத்தை மாற்றக் கூடியதாகும். "சுய-மேலாண்மை திட்டம்" என அழைக்கப்படும் ஒரு சிறப்பு பயிற்சி, பக்கவாதம் கொண்டமக்களுக்கு பக்கவாதத்தைப் பற்றி போதித்தல், அவர்களின் பிரச்சனைகள் மற்றும் சவால்களை சமாளிக்க திறமைகளை கற்று கொடுத்தல், அவர்களின் சொந்த இலக்குகளை கண்டறியவும் மற்றும் அவற்றை அடையவும் உதவுதல், மற்றும் சுய-உதவியை கற்று கொடுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கும்.

ஆய்வு பண்புகள்

பக்கவாதம் கொண்ட மக்களுக்கான இந்த திட்டங்களின் நன்மைகளை ஆராய்ந்த1863 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய ஏப்ரல் 2016 வரை வெளியாகியிருந்த 14 ஆய்வுகளை நாங்கள் கண்டோம். அவை, வெவ்வேறு நாடுகளில் மற்றும் வடிவுகளில், உதாரணத்திற்கு, சிலவை குழுக்களாக, சிலநேரங்களில் தனிப்பட்டதாக மற்றும் வெவ்வேறு காலகட்டங்களில் நடத்தப்பட்டிருந்தன.

முக்கிய முடிவுகள்

இந்த திட்டங்கள் பக்கவாதம் கொண்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தின என்று நாங்கள் கண்டோம். பக்கவாதம் கொண்ட மக்கள், தங்களின் சந்தோசத்திற்கும் மற்றும் வாழ்வின் திருப்திக்கும் பிறரை சார்ந்திருக்கும் நிலை மாறி, தாங்கள் விரும்பிய பிரகாரம் வாழ்வதிலும் மற்றும் தங்களின் வாழ்க்கையை பொறுப்பெடுத்துக் கொள்வதிலும் தேவைப்படும் திறனில் மேம்பாடுகளை அறிக்கையிட்டனர். அபாயம் அல்லது எதிர்மறை விளைவுகள் பற்றி எந்த பதிவுகளும் இல்லை.

சான்றின் தரம்

பெரும்பான்மையான ஆய்வுகள் சிறப்பான முறையில் நடத்தப்பட்டுள்ளன, மற்றும் சமூகத்தில் வாழும் பக்கவாதம் கொண்ட மக்களுக்கு சுய-மேலாண்மை திட்டங்கள் நன்மை பயக்கும் என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரத்தை அளிக்கின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information