கர்ப்பிணி பெண்கள் வைட்டமின் சி ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்

கர்ப்பிணி பெண்களுக்கு வைட்டமின் சி ஊட்டச்சத்து மாத்திரைகள்

இங்கு கேள்வி என்ன?

கர்ப்பிணி பெண்கள் வைட்டமின் சி ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் அவர்களுக்கோ பிறக்கும் குழைந்தைகளுக்கோ பயன் ஏதும் ஏற்படுவதுண்டா? வைட்டமின் சி மாத்திரைகள் சாப்பிடுவதால் பக்க விளைவுகள் ஏற்படுமா?

இந்த கேள்வி ஏன் அவசியம்?

கர்ப்பகாலத்தில் வைட்டமின் சி மாத்திரைகள் சாப்பிடாவிட்டால் உயர் இரத்த அழுத்தம், கை, கால் முக வீக்கம், இரத்த சோகை மற்றும் குழந்தையின் எடை குறைவு போன்ற சிக்கல்கள் ஏற்படலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இது உண்மையா என்று கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கம்.

இந்த ஆய்வின் முடிவுகள் என்ன?

இந்த ஆய்வில் 17 நாடுகளில் 24,000 கர்ப்பிணி பெண்கள் பங்கேற்ற 29 சோதனை ஆராய்சிகளின் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில் நான்கு ஆராய்சிகள் எங்கள் ஆய்விற்கு தேவையான தகவல் எதுவும் பங்களிக்கவில்லை. இந்த ஆய்வின் முடிவில் அறியப்பட்ட ஆதாரங்கள் மிதமானது அல்லது உயர்ந்த தரம் வாய்ந்தவையாக உள்ளன. 15 சோதனை ஆராய்ச்சிகளில் தினசரி 1000 மி.கி. வைட்டமின் சி பயன்படுத்தப்பட்டது. கர்ப்பகாலதில் வைட்டமின் சி மாத்திரைகள் தனியாகவோ அல்லது வைட்டமின் ஈ போன்ற மற்ற ஊட்டச்சத்து மருந்துகளுடன் சேர்த்தோ சாப்பிடுவதால் தாய்மார்களுக்கோ, பிறக்கும் குழந்தைகளுக்கோ குறிப்பிடத்தக்க பயன் ஏதும் ஏற்படுவதில்லை என இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. வைட்டமின் சி உட்கொண்ட பெண்களில் நஞ்சுக்கொடி கருப்பை சுவரிலிறிந்து தேவைக்குமுன்னரே பிரியும் அபாயம் 36% குறைவாக காணப்பட்டது. எனினும், இது வைட்டமின் சி முலம் ஏற்பட்ட பலனா அல்லது அதன் கூடவே கொடுக்கப்பட்ட வேறு ஒரு மருந்தின் காரணமாக ஏற்பட்ட பலனா என்று தெரியவில்லை. வைட்டமின் சி மட்டுமே பெற்றுக்கொண்ட பெண்களில் பிரசவத்திற்கு முன்னரே பனிக்குடம் உடைவது (PROM) சற்று குறைந்து காணப்பட்டது. எனினும், வைட்டமின் சி யுடன் வைட்டமின் ஈ சேர்த்து கொடுக்கப்பட்ட ஆராய்சிகளில் தேவைக்குமுன்னரே பனிக்குடம் உடையும் அபாயம் அதிகரித்தே காணப்பட்டது. எனவே, வைட்டமின் சி யின் காரணமாக தேவைக்கு முன்னர் நஞ்சுக்கொடி பிரிவது பற்றியும், பனிக்குடம் உடைவது பற்றியும் அறிந்துகொள்ள மேலும் ஆராய்ச்சி தேவையாக உள்ளது. இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் மட்டும் வைட்டமின் சி மாத்திரைகள் சாப்பிட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்று வலி அதிகம் ஏற்பட்டது. எனவே கர்ப்பிணிப்பெண்கள் வைட்டமின் சி ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என்றும் தெரியவருகிறது.

இந்த ஆய்வு முடிவுகளின் அர்த்தம் என்ன?

கர்ப்பகாலத்தில் வைட்டமின் சி ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் தாய் அல்லது குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனைகளான உயர் இரத்த அழுத்தம், குறைபிரசவம், குழந்தை இறந்து பிறத்தல், பிறந்தபின் குழந்தையின் மரணம், குழந்தையின் எடை குறைவு போன்றவற்றை தடுப்பதில் எந்தப்பயனும் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [ஜாபெஸ் பால், ஆனந்த விஸ்வநாதன்]

Tools
Information