Skip to main content

குழந்தைகளில் ஏற்படும் கபவாதத்திற்கான (நிமோனியா) நெஞ்சு இயன்முறை மருத்துவம்

கபவாதம் என்பது ஒரு நுரையீரல் அழற்சி நோய், மற்றும் உலகமெங்கும் ஐந்து வயதிற்கு குறைவான குழந்தைகளில் நிகழும் மரணங்களுக்கு இது ஒரு பெரிய காரணமாக விளங்குகிறது. சுவாச நோய் தொற்றுக்களினால் காற்றுக் குழாய்களில் திரளும் சுரப்பு நீரானது, மருத்துவ அறிகுறிகளை மிக மோசமாக்கி, குழந்தை சுவாசிப்பதை கடினமாக்குவதில் பங்களிக்கிறது. நெஞ்சு இயன்முறை மருத்துவம் ஒரு குறை-நிரப்பு சிகிச்சையாக செயல்பட்டு நோயாளியின் மீட்பிற்கு பங்களிக்க கூடும், ஏனன்றால், அது அழற்சி சுரப்புகளை அகற்றி, சுவாசக்குழாயின் தடைகளை நீக்கி, சுவாசக்குழாய் எதிர்ப்பு மற்றும் சுவாச வேலையைக் குறைக்க உதவ முடியும். நெஞ்சு இயன்முறை மருத்துவ நுட்பங்கள், நெஞ்சு சுவரைக் கைகளால் தட்டுதல், மற்றும் சளி வடிகாலுக்காக நோயாளியின் உடலை திறம் வாய்ந்த நிலையில் பொருத்துதல் போன்ற முறைகளை, இருமல் மற்றும் மூச்சு இயக்க நுட்பங்களுடன் ஒருங்கிணைக்கின்றன.

கபவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில், நெஞ்சு இயன்முறை மருத்துவத்தின் பயன்களை அறிய நாங்கள் ஆதாரத்தை தேடினோம். 29 நாட்கள் முதல் 12 ஆண்டுகள் வரை வயதுடைய கபவாதம் கொண்ட 255 குழந்தைகளை உள்ளடக்கிய மூன்று ஆய்வுகளை நாங்கள் கண்டறிந்தோம். சேர்க்கப்பட்ட அனைத்து ஆய்வுகளிலும், சில வகையான இயன்முறை மருத்துவம் பெற்ற ஒரு குழுவும், மற்றும் இயன்முறை மருத்துவம் பெறாத 'கட்டுப்பாடு குழு' என்றழைக்கப்பட்ட மற்றொரு குழுவும் இருந்தது. இரண்டு குழுக்களிலிருந்த குழந்தைகளும் கபவாதத்திற்கான தரமான மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டனர். சேர்க்கப்பட்டிருந்த இரண்டு ஆய்வுகள், சுவாச விகிதம் (ஒரு நிமிடத்திற்கு, சுவாசத்தின் எண்ணிக்கை குறையும் வீதம்) மற்றும் பிராணவாயு செறிவு (இரத்தம் எவ்வளவு பிராணவாயுவை கொண்டுசெல்கிறது , அதிகபட்ச சதவிகிதமாக அது எவ்வளவு கொண்டுசெல்ல முடியும் என்பதற்கான அளவீடு) ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டு பிடித்தது. ஆனால், சேர்க்கப்பட்டிருந்த மற்றொரு ஆய்வோ, தரமான சுவாச இயன்முறை மருத்துவம் மற்றும் நேர்மறையான வெளிமூச்சு அழுத்தம் (வெளிமுச்சின் இறுதியில், வளிமண்டல அழுத்தத்தை விட நுரையீரலில் அதிக அழுத்தத்தை பராமரித்தல்) மருத்துவ தீர்மானத்தின் நேரத்தையும் மற்றும் மருத்துவமனையில் தங்கும் காலத்தையும் குறைத்தது என்று காட்டத் தவறியது. தலையீடுகள் தொடர்பான எந்த பாதகமான விளைவுகளைப் பற்றியும் விவரிக்கப்படவில்லை. இந்த சீராய்வுரை, ஆய்வுகள் பற்றாக்குறை மற்றும் தற்போதுள்ள தரவையின் குறைவான தரம் ஆகியவற்றின் வரம்பிற்குட்பட்டது. சேர்க்கப்பட்டிருந்த இரண்டு ஆய்வுகள், குறைந்தளவு பாரபட்சத்தின் அபாயத்தை கொண்டிருந்தது, அதே சமயம் மற்றொரு ஆய்வு ஒட்டுமொத்த தெளிவில்லாத பாரபட்சத்தின் அபாயத்தை கொண்டிருந்தது. சிகிச்சை காலம், தீவிரத்தின் நிலை, கபவாத வகைகள், மற்றும் கபவாதம் கொண்ட குழந்தைகளுக்கு பயன்படுத்தப்பட்ட நுட்பங்கள் போன்ற சில பண்புகளால் ஆய்வுகள் வேறுப்பட்டிருந்தன. மேலும், சேர்க்கப்பட்டிருந்த ஆய்வுகள் பல்வேறு விளைவுகளை பதிவு செய்தது, மேலும் அவற்றின் தரவு புள்ளிவிவர வழங்கலில் வேறுபாடுகளைக் கொண்டிருந்தன. இதன் விளைவாக, மெட்டா-ஆய்வு மூலமாக (ஒருங்கிணைத்தல்) சோதனைகளின் முடிவுகளை எங்களால் ஒப்பிட முடியவில்லை. கபவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் இயன் முறை மருத்துவத்தின் உபயோகத்தை ஆதரிக்கவோ அல்லது ஆட்சேபிக்கவோ, இந்த ஆய்வுரையில் முடிவான ஆதாரமில்லை. இந்த முடிவுகள், முறையே மே 2013 ல் புதுப்பிக்கப்பட்டது

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Citation
Chaves GSS, Freitas DA, Santino TA, Nogueira PAMS, Fregonezi GAF, Mendonça KMPP. Chest physiotherapy for pneumonia in children. Cochrane Database of Systematic Reviews 2019, Issue 1. Art. No.: CD010277. DOI: 10.1002/14651858.CD010277.pub3.