Skip to main content

கர்ப்பக்காலத்தில் இடுப்புக்கூடு மற்றும் கீழ்முதுகு வலியைத் தடுப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்குமான சிகிச்சை முறைகள்

திறனாய்வு கேள்வி

கர்ப்ப காலத்தில் கீழ்முதுகுவலி, இடுப்பறை வலி அல்லது இரண்டும் சேர்ந்து வரும்பொழுது, அதனை தடுப்பதற்கோ அல்லது சிகிச்சையளிக்கவோ பயன்படுத்தும் ஏதேனுமொரு சிகிச்சையின் திறன் பற்றிய ஆதாரங்களை நாங்கள் தேடினோம். மேலும் நாங்கள் கர்ப்பிணி பெண்களுக்கு இந்த சிகிச்சைகள், வலியினால் உண்டாகும் உடல் ஊனத்தையும், பிணி விடுப்பையும் குறைக்கின்றனவா மற்றும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றனவா என்றும் அறிய விரும்பினோம்.

பின்புலம்

கீழ்முதுகு வலி மற்றும் இடுப்பறை வலி என்பது கர்ப்பகாலத்தில் பொதுவாக காணப்படும் பிரச்சினை. பெரும்பாலும் கரு வளர வளர வலியும் அதிகரிக்கும். இந்த வலி கர்ப்பிணி பெண்களின் அன்றாட நடவடிக்கைகளையும், வேலையையும் , உறக்கத்தையும் கெடுக்கும். இது போன்ற பிரச்சினையுடைய கர்ப்பிணி பெண்களுக்கு ஏதேனுமொரு சிகிச்சை அல்லது கூட்டு சிகிச்சைகள், மகப்பேறுக்கு முந்திய வழக்கமான பராமரிப்புகளைவிட நற்பயன் அளிப்பதாக உள்ளதா என்று நாங்கள் அறிய விரும்பினோம்.

ஆய்வு பண்புகள்

இந்த ஆதாரம் 19 ஜனவரி 2015 நிலவரப்படியானது. 16 முதல் 45 வயதுள்ள 5121 கர்ப்பிணி பெண்கள் கொண்ட 34 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளை இந்த மேம்படுத்தப்பட்ட திறனாய்வில் நாங்கள் சேர்த்தோம். பெண்கள் 12 யிருந்து 38 வார கர்ப்பமாக இருந்தனர். கீழ்முதுகுவலி, இடுப்பறை வலி அல்லது இவ்விரண்டு வகையான வலிகளும் சேர்ந்திருக்கும்போது கருவுற்ற பெண்களுக்கு அளிக்க வேண்டிய பல்வேறு சிகிச்சைகளை இந்த ஆய்வுகள் தேடின. 23 ஆய்வுகள் வழக்கமான மகப்பேறு முந்திய பேணுகையுடன் இந்த சிகிர்சை முறைகள் இணைந்து ஏற்படுத்தும் விளைவை வெறும் வழக்கமான மகப்பேறு முந்திய பேணுகையுடன் ஒப்பிட்டு ஆராய்த்திருத்தன. ஆய்வுகள் பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை குறிப்பிட்ட சோதனைகளின் வாயிலாக, சுயமாகத் தெரிவித்தல் வலி குறைதல், மற்றும் பிணிவிடுப்பு போன்ற பல்வேறு கோணங்களில் அளவீடு செய்தன .

முக்கிய முடிவுகள்

கீழ்முதுகுவலி

நிலம்சார்ந்த உடற்பயிற்சிகளை வழக்கமான மகப்பேறுக்கு முந்தைய பேணுகையோடு ஒப்பிட்ட ஏழு ஆய்வுகளின் (645 பெண்கள்) முடிவுகளை இணைத்தபோது, உடற்பயிற்சி தலையீடுகளால் (ஐந்து முதல் 20 வாரங்கள் வரையிலான) பெண்கள் உடல் ஊனம் அளவு மற்றும் கீழ்முதுகுவலி அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இடுப்பறை வலி

இடுப்பறை வலி சிகிச்சைகளுக்கு குறைவான ஆதாரங்களே உள்ளது. வெறும் வழக்கமான மகப்பேறு முந்திய பேணுகை மட்டும் பெறும் பெண்களை விட, குழுவாக இணைந்து உடற்பயிற்சிகள் செய்து வலியை சமாளிக்கும் வழிமுறைகள் பற்றிய அறிவுரைகள் பெற்ற பெண்கள் தங்களது இடுப்பறை வலியில் எந்த வித்தியாசத்தையும் காட்டவில்லை என்று இரண்டு ஆராய்ச்சிகள் கண்டறிந்தன.

கீழ்முதுகுவலி மற்றும் இடுப்பறை வலி

1176 கர்ப்பிணி பெண்கள் பங்கு பெற்ற 4 ஆய்வுகளின் முடிவுகள் 8முதல் 12 வார உடற்பயிற்சி திட்டங்கள் கீழ் முதுகு வலி மற்றும் இடுப்பு வலி இருப்பதாகத் தெரிவித்த பெண்களின் எண்ணிக்கையைக் குறைத்ததாகக் காண்பித்தன. 1062 கர்ப்பிணி பெண்கள் பங்கு பெற்ற 2 ஆய்வுகளின் முடிவுகள் பலவித படிவங்களில் செய்யப்படும் நிலம் சார்ந்த உடற்பயிற்சி முதுகு வலி மற்றும் இடுப்பறை வலியைக் குறைத்ததோடு அவை தொடர்பான பிணி விடுப்பினையும் குறைத்தது என்று கூறுகின்றன.

எனினும், ஏனைய இரண்டு ஆய்வுகள் (374 பெண்கள்) குழுவாக செய்யும் உடற்பயிற்சியுடன் தகவல் வழங்குதல், பிரசவத்திற்கு முன்னதாக அளிக்கப்படும் வழக்கமான பேணுகைவிட சிறப்பானது இல்லை என்று கண்டறிந்தது.

பல தரப்பட்ட சிகிச்சை முறைகளை சோதனை செய்த பல ஒற்றை ஆய்வுகள் இருந்தன. இவற்றின் முடிவுகள் கிரநியோ-சாக்கரல் சிகிச்சைமுறை(craniosacral therapy) மற்றும் ஒஸ்டியோ-மெனுபுலேடிவ் சிகிச்சை (osteomanipulative therapy) அல்லது பல முனை மாதிரி தலையீடு,(கையாளல் சிகிச்சை முறை, உடற்பயிற்சி மற்றும் கல்வி) போன்றவை நல்ல பலனை தருவதாக கூறுகின்றன.

எந்த ஆய்விலும் நீடித்த பக்கவிளைவுகள் உண்டானதாக கூறவில்லை.

சான்றின் தரம் மற்றும் முடிவுரை

உடற்பயிற்சி, கீழ் முதுகு வலியுள்ள பெண்களுக்கு வலி மற்றும் உடல் ஊனத்தை மேம்படுத்துகிறது என்பதர்க்குக் குறைந்த தரமுள்ள ஆதாரங்களே உள்ளன. உடற்பயிற்சியினால் குறைந்த பிணிவிடுப்பு மட்டுமின்றி கீழ்முதுகுவலியோடு இடுப்பறை வலியும் சேர்ந்து உள்ள பெண்களில் வலி இருப்பதாக தெரிவிப்போர் எண்ணிக்கையும் குறைகின்றது என்பதற்கு மிதமான தரமுள்ள ஆதாரங்களே உள்ளன . சொற்ப எண்ணிக்கையில் பெண்கள் ஆய்வுகளில் பங்குபெறுவது மற்றும் ஆய்வு முறைகளில் உள்ள கோளாறுகளே சான்றுகளின் தரம் குறைவதற்கான காரணங்கள் . இதன் விளைவாக, எங்களின் முடிவுகள் எதிர்காலத்தில் மாற்றமடைய அதிக வாய்ப்புகள் உள்ளன என்று நம்புகிறோம். இந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பான நம்பிக்கையூட்டும் முடிவுகளை எடுக்க போதுமான நல்ல தரமான ஆதாரங்கள் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பு: ஹரிகணேஷ் மற்றும் சி.இ.பி.என்.அர். குழு

Citation
Liddle SD, Pennick V. Interventions for preventing and treating low-back and pelvic pain during pregnancy. Cochrane Database of Systematic Reviews 2015, Issue 9. Art. No.: CD001139. DOI: 10.1002/14651858.CD001139.pub4.