வயது வந்தவர்களில் தூக்கமின்மைக்காக இசை

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

திறனாய்வு கேள்வி

இந்த திறனாய்வு, வயது வந்தவர்களில் தூக்கமின்மையின் மீது இசையை கேட்பதின் விளைவுகள் மற்றும் இந்த விளைவை பாதிக்க கூடிய காரணிகளின் தாக்கத்தை அளவிட்டது.

பின்புலம்

உலகம் முழுவதும், லட்சக்கணக்கான மக்கள் தூக்கமின்மையை அனுபவிக்கின்றனர். தூங்க முயற்சிப்பதில், தொடர்ந்து தூங்குவதில், மக்கள் பிரச்னைகளைக் கொண்டிருக்கக் கூடும், அல்லது மோசமான தரமுடைய தூக்கத்தை அனுபவிக்கக் கூடும்.

மோசமான தூக்கம் மக்களுடைய உடல் மற்றும் மன நலத்தை பாதிக்கும். மோசமான தூக்கத்தின் பின்விளைவுகள் தனிப்பட்ட நபர்கள் மற்றும் சமுகம் இரண்டிற்கும் அதிக செலவை ஏற்படுத்தும். அநேக மக்கள், அவர்களின் தூக்கத்தை மேம்படுத்த இசையை கேட்பர், ஆனால் இசையை கேட்பதின் விளைவு பற்றி தெளிவாக தெரியவில்லை.

ஆய்வு பண்புகள்

தொடர்புடைய ஆய்வுகளை நாங்கள் அடையாளம் காணுவதற்கு, மின்னணு தரவுத்தளங்கள் மற்றும் இசை சிகிச்சை பத்திரிகைகளை தேடினோம். மொத்தம் 314 பங்கேற்பாளர்களை கொண்டிருந்த ஆறு ஆய்வுகளை நாங்கள் சேர்த்தோம். வெறும் இசையை மட்டும் கேட்பது அல்லது வழக்கமான பராமரிப்புடன் கேட்பதை, வெறும் வழக்கமான பராமரிப்பு அல்லது சிகிச்சையின்மையோடு ஆய்வுகள் ஒப்பிட்டன. முன்-பதிவு செய்யபட்டிருந்த இசையை தினமும் 25 முதல் 60 நிமிடங்கள் வரை, மூன்று நாட்கள் முதல் ஐந்து வாரங்கள் வரை கேட்பதின் விளைவை இந்த ஆய்வுகள் மதிப்பிட்டன. இந்த ஆதாரம் 22 மே 2015 வரை தற்போதையது.

முக்கிய முடிவுகள்

ஐந்து ஆய்வுகள் தூக்கத்தின் தரத்தை மதிப்பிட்டன. இசையை கேட்பதினால், தூக்கத்தின் தரம் மேம்படக் கூடும் என்று முடிவுகள் பரிந்துரைக்கின்றன. தூங்குவதற்கு எடுத்துக்கொள்ளும் நேர அளவு, ஒருவருக்கு கிடைக்கப்பெறும் உண்மையான தூக்கத்தின் அளவு, மற்றும் மக்கள் எத்தனை தரம் விழிக்கின்றனர் என்பது போன்ற தூக்கத்தின் பிற அம்சங்களின் மீதான தரவை ஒரே ஒரு ஆய்வு அறிக்கையிட்டிருந்தது. இசையை கேட்பது, இந்த விளைவுகளுக்கு பயனளிக்கும் என்று பரிந்துரைப்பதற்கு ஆதாரம் இல்லை என இந்த ஆய்வு கண்டது. இசையை கேட்பதினால் ஏற்படும் எந்த எதிர்மறையான பக்க விளைவுகளையும் பற்றி எந்த ஒரு ஆய்வும் அறிக்கையிடவில்லை.

சான்றின் தரம்

தூக்கத்தின் தரத்தை சோதித்த ஐந்து ஆய்வுகளுடைய ஆதாரத்தின் தரம் மிதமான அளவில் இருந்தன. தூக்கத்தின் பிற அம்சங்களுக்கான ஆதாரத்தின் தரம் குறைவாக இருந்தது. தூக்கத்தின் தரத்திற்கு மேலாக, தூக்கத்தின் பிற அம்சங்கள் மற்றும் தொடர்புடைய பகல்நேர அளவீடுகளின் மேல் இசையை கேட்பதினால் ஏற்படும் விளைவுகளை ஆராய மற்றும் அவற்றை நிர்ணயிக்க அதிகமான உயர்தர ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.