மாதவிடாயின் போது ஏற்படும் வலிக்கான உணவுத் திட்ட உப பொருள்கள்

திறனாய்வு கேள்வி

மாதவிடாய் வலியின் (டிஸ்மெனொரியா) மீதான உணவுத் திட்ட உப பொருள்களுடைய விளைவின் ஆதாரத்தை காக்ரேன் ஆசிரியர்கள் திறனாய்வு செய்தனர், (எ.கா. வைட்டமின்கள், தாதுக்கள், மூலிகைகள்)

பின்புலம்

மாதவிடாய் வலியின் சிகிச்சைக்கு உணவுத் திட்ட உப பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் நன்மைகள் மற்றும் தீங்குகள் பற்றி ஆராய்வது முக்கியமாகும். முதன்மை டிஸ்மெனொரியா அல்லது இடமகல் கருப்பை அகப்படலம் (எண்டோமெட்ரியோசிஸ்) போன்ற பிற காரணங்கள் தொடர்பான இரண்டாம் நிலை டிஸ்மெனொரியா கொண்ட பெண்களில் பிற உப பொருள்கள், போலி சிகிச்சை, சிகிச்சையின்மை அல்லது பாரம்பரிய வலி நிவாரணிகள் (வலி நிவாரணம்) ஆகியவற்றோடு ஒப்பிட்ட உணவுத் திட்ட உப பொருள்களின் திறனை நாங்கள் ஆராய்ந்தோம். இந்த ஆதாரம் 23 மார்ச் 2015 வரைக்கும் நிலவரப்படியானது.

ஆய்வு பண்புகள்

நாங்கள் 27 சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளை (3101 பெண்கள்) உள்ளடக்கினோம். பெரும்பாலான பங்கேற்பாளர்கள், முதன்மை டிஸ்மெனொரியாவை கொண்டிருந்த பிந்தைய வளர் இளம் பருவத்தில் இருந்த மாணவிகள் அல்லது ஆரம்ப இருபது வயதுகளில் இருந்தவர்களாவர். பெரும்பாலான ஆய்வுகள் ஈரானில் நடத்தப்பட்டன. சிகிச்சை தலையீடுகள் 12 வெவ்வேறு வகையான மூலிகை மருந்துகள் (காமமைல், இலவங்கப் பட்டை, டமாஸ்க் ரோஜா, டில், பெருஞ்சீரகம், வெந்தயம், இஞ்சி, கொய்யா, ரூபார்ப், ஊசரா, வலேரியன், மற்றும் ஜாட்டரியா) மற்றும் விதவிதமான மூலக்கூறுகள் மற்றும் அளவைகளில் ஐந்து மூலிகையற்ற உப பொருள்களை (மீன் எண்ணெய் , மெலட்டொனின், வைட்டமின் B1 மற்றும் E, மற்றும் சிங்க் சல்பேட்) உள்ளடக்கின. பிற உப பொருள்கள், போலி சிகிச்சை, சிகிச்சையின்மை மற்றும் ஸ்டீராய்டற்ற அழற்சி நீக்கி மருந்துகள் ஆகியவற்றோடு உப பொருள்கள் ஒப்பிடப்பட்டன.

முக்கிய முடிவுகள்

டிஸ்மெனொரியாவிற்கான எந்த ஒரு உணவுத் திட்ட உப பொருளுடைய திறனையும் ஆதரிக்க எந்த உயர்தர ஆதாரமும் இல்லை மற்றும் பாதுகாப்பிற்கான ஆதாரம் இருக்கவில்லை. எனினும், அநேக உப பொருள்களின் திறனிற்கு சில குறைந்த தர ஆதாரம் உள்ளது. ஒரு சாத்தியமான நன்மையை பரிந்துரைக்க சிறிதளவில் மிகவும் வரையறுக்கப்பட்ட ஆதாரத்தை கொண்ட உப பொருள்கள், வெந்தயம், இஞ்சி, வலேரியன், ஜாட்டரியா, சிங்க் சல்பேட், மீன் எண்ணெய்,மற்றும் வைட்டமின் B1 ஆகியவை ஆகும்.

எண்டோமெட்ரியோசிஸ் காரணமாக இரண்டாம் நிலை டிஸ்மெனொரியாவிற்கு, போலி சிகிச்சையை ஒப்பிடும் போது, மெலட்டொனினின் நன்மைக்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை.

சான்றின் தரம்

அனைத்து ஒப்பீடுகளுக்கும், ஆதாரம் குறைந்தது முதல் மிக குறைந்த தரத்தை கொண்டிருந்தன. மிக சிறிய ஆய்வு மக்கள் எண்ணிக்கைகள், ஆய்வு செயல்முறைகளை அறிக்கையிடுவதில் தோல்வி மற்றும் நிலையற்ற தன்மை போன்றவற்றால் ஏற்பட்ட துல்லியமற்ற தன்மையே முதன்மை வரையறைகள் ஆகும். பெரும்பாலான ஒப்பீடுகளுக்கு, ஒரே ஒரு ஆய்வு மட்டுமே உள்ளடக்கப்பட்டு இருந்தது, மற்றும் உள்ளடக்கப்பட்ட மிக சில ஆய்வுகளே பாதகமான விளைவுகளை அறிக்கையிட்டிருந்தன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information