Skip to main content

ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்கள் (ஏஎஸ்டி) கொண்ட இளம் குழந்தைகளில் செயல்பாட்டு நடத்தைகள் மற்றும் திறன்களை அதிகரிப்பதற்கு முன்கூட்டிய தீவிர நடத்தை சார்ந்த சிகிச்சை தலையீடு

ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்கள் (ஏஎஸ்டி) கொண்ட இளம் குழந்தைகளுக்கு மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் சிகிச்சைகளில் ஒன்று முன்கூட்டிய தீவிர நடத்தை சார்ந்த சிகிச்சை தலையீடாகும். முன்கூட்டிய தீவிர நடத்தை சார்ந்த சிகிச்சை தலையீட்டை ஆராய்வதே இந்த திறனாய்வின் நோக்கமாகும். ஏஎஸ்டி கொண்ட இளம் குழந்தைகளுக்கு முன்கூட்டிய தீவிர நடத்தை சார்ந்த சிகிச்சையை பள்ளிகளில் பொதுவான சிறப்பு கல்வி சேவைகளுக்கு ஒப்பிட்ட மொத்தம் ஐந்து ஆய்வுகளை நாங்கள் கண்டோம். ஒரே ஒரு ஆய்வு மட்டும் ஒரு சிகிச்சை அல்லது ஒப்பீட்டு குழுவிற்கு சீரற்ற முறையில் ஒதுக்கீடு (ஆராய்ச்சியில், உயர்நிலை முறைமை என்று கருதப்படும்) செய்தது. பிற நான்கு ஆய்வுகள், குழந்தைகளை குழுக்களில் வகைப்படுத்த பெற்றோரின் தேர்வை பயன்படுத்தின. அனைத்து ஐந்து ஆய்வுகளின் முடிவுகளையும் நாங்கள் ஆராய்ந்து ஒப்பிட்டோம். இந்த ஐந்து ஆய்வுகளில், மொத்தம் 203 குழந்தைகள் (சிகிச்சை ஆரம்பிக்கப்பட்ட போது, அனைத்து குழந்தைகளும் ஆறு வயதிற்கும் குறைவாக இருந்தனர்) உள்ளடக்கப்பட்டிருந்தனர். சிகிச்சைக்கு பின்னான ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளில், ஒப்பீட்டு குழுக்களில் இருந்த குழந்தைகளைக் காட்டிலும், முன்கூட்டிய தீவிர நடத்தை சார்ந்த சிகிச்சையை பெற்ற குழந்தைகள், ஏற்புறு நடத்தையின் சோதனைகள் (சுயசார்பை அதிகரிக்கும் நடத்தைகள் மற்றும் ஒரு சூழ்நிலைக்கேற்ப ஏற்றுக் கொள்ளும் திறன்), அறிவுகூர்மை, சமூக திறன்கள், தகவல் தொடர்பு மற்றும் மொழி, ஆட்டிசம் அறிகுறிகள் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் சிறப்பான செயல்திறம் கொண்டவர்களாக இருந்தனர். ஏஎஸ்டி கொண்ட சில குழந்தைகளுக்கு முன்கூட்டிய தீவிர நடத்தை சார்ந்த சிகிச்சையின் பயனை ஆதாரம் ஆதரிக்கிறது. எனினும், ஆய்வுகளில் சிறிய எண்ணிக்கையிலான குழந்தைகளே உள்ளடக்கப்பட்டு இருந்ததால், ஆதாரத்தின் தரம் குறைவாக இருந்தது, மற்றும் ஒரே ஒரு ஆய்வு மட்டுமே குழந்தைகளை சீரற்ற முறையில் குழுக்களுக்கு ஒதுக்கீடு செய்தது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Citation
Reichow B, Hume K, Barton EE, Boyd BA. Early intensive behavioral intervention (EIBI) for young children with autism spectrum disorders (ASD). Cochrane Database of Systematic Reviews 2018, Issue 5. Art. No.: CD009260. DOI: 10.1002/14651858.CD009260.pub3.