ஃபைப்ரோமியால்ஜியாவிற்கான தசை எதிர்ப்பாற்றல் பயிற்சி (அதாவது எடை-தூக்கும் பயிற்சி போன்ற)

ஆராய்ச்சி கேள்வி

ஃபைப்ரோமியால்ஜியா கொண்ட மக்களில், ஆரோக்கியம், அறிகுறிகள், உடற் திறன் மற்றும் எதிர்மறையான விளைவுகள் மீதான தசை எதிர்ப்பாற்றல் உடற்பயிற்சியின் விளைவுகள் என்ன?

பின்புலம்

ஃபைப்ரோமியால்ஜியா என்ன பிரச்சனைகளை ஏற்படுத்தும்? ஃபைப்ரோமியால்ஜியா கொண்ட மக்கள் தொடர்ச்சியான, பரவலான உடல் வலி மற்றும் அடிக்கடி ஏற்படும் சோர்வு, விறைப்புத்தன்மை, மனச்சோர்வு, மற்றும் தூங்குவதில் சிரமம் போன்ற அறிகுறிகளை அனுபவிப்பர்.

எதிர்ப்பாற்றல் பயிற்சி என்றால் என்ன? எதிர்ப்பாற்றல் பயிற்சி என்பது பளு தூக்குவது, அல்லது இயக்க எதிர்ப்பை வழங்குவதற்கு இயந்திரங்கள் அல்லது மீள் இயல்புடைய பட்டைகளை பயன்படுத்துகிற உடற்பயிற்சி ஆகும்.

- ஒரு பயிற்சி பெற்ற தொழில்முறை வல்லுனர் மூலம் கண்காணிக்கப்பட்ட எதிர்ப்பாற்றல் பயிற்சி திட்டங்களை மட்டுமே இந்த திறனாய்வு பார்த்தது.

- எதிர்ப்பாற்றல் உடற்பயிற்சியை பிற வகையான உடற்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியின்மையோடும் நாங்கள் ஒப்பிட்டோம்.

ஆய்வு பண்புகள்

மார்ச் 2013-ல், அனைத்து தொடர்பான ஆய்வுகளை நாங்கள் தேடிய பிறகு, ஃபைப்ரோமியால்ஜியா கொண்ட 219 பெண்கள் சம்மந்தப்பட்ட 5 ஆய்வுகளை கண்டறிந்தோம். இப்பெண்களில், தொன்னூற்றி-ஐந்து (95) பேர் எதிர்ப்பாற்றல் பயிற்சியை செய்தனர்.

மூன்று ஆய்வுகள் மட்டுமே, எதிர்ப்பாற்றல் பயிற்சி செய்த ஃபைப்ரோமியால்ஜியா கொண்ட 54 பெண்களிலும் மற்றும் எதிர்ப்பாற்றல் பயிற்சி செய்யாத ஃபைப்ரோமியால்ஜியா கொண்ட 53 பெண்களிலும், ஆரோக்கியம், அறிகுறிகள், மற்றும் உடற்திறனை பார்த்தது.

எதிர்ப்பாற்றல் பயிற்சி செய்த ஃபைப்ரோமியால்ஜியா கொண்ட 54 பெண்கள்:

- உடற்பயிற்சி உபகரணங்கள், கட்டற்ற எடைகள், மற்றும் உடல் எடையை பயன்படுத்தி மேற்பார்வையிடப்பட்ட எதிர்ப்பாற்றல் பயிற்சி அமர்வுகளை செய்தனர்

- ஒரு வாரத்தில் 2 அல்லது 3 முறை பயிற்சி செய்தனர்

- 16 முதல் 21 வாரங்கள் வரை பயிற்சி செய்தனர்.

முக்கிய முடிவுகள்: 16 முதல் 21 வாரங்கள் வரை எதிர்ப்பாற்றல் பயிற்சியில் பங்கேற்ற ஃபைப்ரோமியால்ஜியா கொண்ட பெண்களுக்கு, இக்காலக்கட்டத்தில் எதிர்ப்பாற்றல் பயிற்சியில் பங்கேற்காதவர்களை ஒப்பிடும் போது என்ன நடந்தது?

ஒட்டுமொத்த-நலன் (0 முதல் 100 அலகுகள் கொண்ட அளவீட்டில் பல்பரிமாண செயல்பாடு)

எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்த பெண்கள், தங்களின் ஒட்டுமொத்த-நலனை 25 அலகுகள் சிறப்பாக மதிப்பிட்டனர், அதே சமயம், எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்யாதவர்கள் தங்களின் ஒட்டு மொத்த-நலனை 8 அலகுகள் சிறப்பாக மதிப்பிட்டனர்.

ஆதலால், ஆய்வுகளின் முடிவில், எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்த பெண்கள், எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்யாதவர்களைக் காட்டிலும், தங்களின் ஒட்டு மொத்த-நலனை 17 அலகுகள் சிறப்பாக மதிப்பிட்டனர்.

0 முதல் 100 அலகுகள் கொண்ட ஒரு அளவீட்டில், உடற் செயல்பாடு (சாதரண நடவடிக்கைகளைச் செய்யக் கூடிய திறன்)

எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்த பெண்கள், சாதாரண நடவடிக்கைகளைச் செய்யக்கூடிய தங்களின் திறனை 8 அலகுகள் சிறப்பாக மதிப்பிட்டனர், அதே சமயம், எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்யாதவர்கள், சாதாரண நடவடிக்கைகளைச் செய்யக்கூடிய தங்களின் திறனை 2 அலகுகள் சிறப்பாக மதிப்பிட்டனர்.

ஆதலால், ஆய்வுகளின் முடிவில், எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்த பெண்கள், எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்யாத பெண்களைக் காட்டிலும், சாதாரண நடவடிக்கைகளைச் செய்யக்கூடிய தங்களின் திறனை 6 அலகுகள் சிறப்பாக மதிப்பிட்டனர்.

0 முதல் 100 அலகுகள் கொண்ட ஒரு அளவீட்டில், வலி

எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்த பெண்கள், தங்களின் வலியை 3.5 அலகுகள் சிறப்பாக மதிப்பிட்டனர், அதே சமயம், எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்யாதவர்கள், தங்களின் வலியை 1 அலகு சிறப்பாக மதிப்பிட்டனர்.

ஆதலால், ஆய்வுகளின் முடிவில், எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்த பெண்கள், எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்யாத பெண்களைக் காட்டிலும், தங்களின் வலியை 2.5 அலகுகள் சிறப்பாக மதிப்பிட்டனர்.

4 கிலோகிராம் அழுத்தத்தின் போது, புள்ளிகளின் எண்ணிக்கை கொண்டு (மொத்தம் 18 புள்ளிகள்) வலி என்று உணரப்படும் தொடு அழுத்த வலி உணர்வை மதிப்பிடுதல்

எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்த பெண்களுக்கு, 4 குறைவான தொடு அழுத்த வலி புள்ளிகள் இருந்தது, அதே சமயம், எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்யாத பெண்களுக்கு, தொடு அழுத்த வலி உணர்வு 2புள்ளிகள் குறைவாக இருந்தது.

ஆதலால், ஆய்வுகளின் முடிவில், எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்த பெண்கள், எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்யாத பெண்களைக் காட்டிலும், தொடு அழுத்த வலி, 2 புள்ளிகள் குறைவாக இருந்தது.

தசை வலிமை

எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்த பெண்களால் 28 கிலோ கிராம் அதிகமாக எடை தூக்க முடிந்தது, அதே சமயம், எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்யாத பெண்களால் 1 கிலோ கிராம் அதிகமாக எடை தூக்க முடிந்தது.

ஆதலால், ஆய்வுகளின் முடிவில், எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்த பெண்களால், எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்யாத பெண்களைக் காட்டிலும், 27 கிலோ கிராம் அதிகமாக எடை தூக்க முடிந்தது.

விலகல்கள் (100 பேரில், ஆய்வுகளை கைவிட்ட பெண்களின் எண்ணிக்கை)

எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்த பெண்களில, 13 பேர் ஆய்வுகளை கைவிட்டனர், அதே சமயம், எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்யாத பெண்களில், 4 பேர் ஆய்வுகளை கைவிட்டனர்.

ஆதலால், ஆய்வுகளின் முடிவில், 100 பேரில், எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்யாத பெண்களைக் காட்டிலும், எதிர்பாற்றல் உடற்பயிற்சி செய்த பெண்களில், 9 அதிகமான பேர் ஆய்வுகளை கைவிட்டனர்.

முடிவுரைகள்

ஃபைப்ரோமியால்ஜியா பெண்களில், 16 முதல் 21 வாரங்கள் வரையான எதிர்ப்பபாற்றல் பயிற்சி பெரும்பாலும் மேம்படுத்துகிறவை,

- சாதாரண நடவடிக்கைகளை செய்யக் கூடிய திறன்

- வலி, தொடு அழுத்த வலி, தசை வலிமை மற்றும் ஒட்டுமொத்த-நலன்.

சான்றின் தரம்

- இதுவரை மிகச் சில ஆய்வுகளே செய்யப்பட்டுள்ளதால், மேற்படியான ஆராய்ச்சி இந்த முடிவை மாற்ற வாய்ப்பு உள்ளது.

- ஆய்வுகளின் போது ஃபைப்ரோமியால்ஜியா கொண்ட பெண்கள் அனுபவித்த பக்க விளைவுகளைப் பற்றிய துல்லியமான தகவல் எங்களுக்கு இல்லை என்ற போது, எந்த காயங்களும் பதிவிடப்படவில்லை.

- ஆய்வுகளில் பெண்கள் மட்டுமே பங்கேற்றபடியால், ஆண்களுக்கும் அதே மாதிரியான முடிவுகள் இருந்திருக்குமா என்பது எங்களுக்கு தெரியவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information