இதயநோய் கொண்ட மக்களுக்கான இணையம்-சார்ந்த திட்டங்கள்

திறனாய்வு கேள்வி

இதயநோய் கொண்ட மக்களுக்கு அவர்களின் இதய நோய் நிலைமையை முன்னேற்றுவதில் இணையம்-சார்ந்த ஆதரவு திட்டங்கள் உதவிகரமாக உள்ளனவா?

பின்புலம்

உடல்நலக் குறைவிற்கும் மற்றும் தவிர்க்கக் கூடிய மரணத்திற்கும் இதய நோய் ஓர் மிக பொதுவான காரணமாகும். இதய புனர்வாழ்வு என்பது, இதயநோய் கொண்ட மக்களுக்கு அவர்கள் நல்ல உடல் நலத்தை பெறுவதற்கு உதவும் ஒரு திட்டமாகும். அவை குழு வகுப்புகளாக, மருத்துவமனைகளில் அல்லது ஒரு சமூகத்திற்குள்ளாக நடைபெறும். வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை என்று ஏறக்குறைய ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு இந்த வகுப்புகளில் மக்கள் பங்குபெறுவர். பொதுவாக, உடற்பயிற்சி செய்தல், மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றியஅறிவுரை பெறுதல் போன்றவற்றை இந்த வகுப்புகள் உள்ளடக்கும். இந்த திட்டங்கள் தேவைப்படும் மக்களுக்கு, இவற்றில் பங்கு பெறுவது எப்போதும் முடிவதில்லை. இந்த திட்டத்தை இணையம் மூலம் வழங்குதல் இதற்கு ஒரு மாற்று வழியாகும். இறப்பு விகிதங்கள், அறுவை சிகிச்சைக்கான தேவை,தொடர்ச்சியான மாரடைப்புகள், கொலஸ்ட்ரால் அளவுகள், இரத்த அழுத்தம், ஆரோக்கியம்-சார்ந்த வாழ்க்கைத் தரம், உணவு முறை, உடலியக்க நடவடிக்கை, மருந்து உட்கொள்ளலில் இணக்கம், ஆரோக்கிய பராமரிப்பு பயன்பாடு மற்றும் செலவுகள் ஆகியவற்றை இணையம் மூலம் வழங்கப்பட்ட திட்டங்கள் முன்னேற்றுகின்றனவனா என்பதை இந்த திறனாய்வில் நாங்கள் பார்த்தோம்.

ஆய்வு பண்புகள்

இந்த ஆதாரம் டிசம்பர் 2014 வரை தற்போதையது. 18 ஆய்வுகளை நாங்கள் இணைத்தோம். பதினோரு ஆய்வுகள் முடிவுற்றன, மற்றும் ஏழு ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. முடிவுற்ற ஆய்வுகளில், கரோனரி இதய நோய் கொண்ட 1392 மக்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். பங்கேற்பாளர்களின் சராசரி வயது 54.9 முதல் 66.27 ஆண்டுகள் வரை பரவியிருந்தது. சேர்க்கப்பட்டிருந்த மக்களில் பெரும்பாலனோர் ஆண்கள் ஆவர். உலகளவிலும், மற்றும் பலவிதமான ஆரோக்கிய பராமரிப்பு அமைப்புகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதய நோயோடு தொடர்புடைய பல வகையான வாழ்க்கை முறை காரணிகளை நோக்கமாக கொண்ட பரந்த திட்டங்களை ஏழு ஆய்வுகள் சோதித்தன. உடலியக்க நடவடிக்கை அளவுகளை மட்டும் அதிகரிப்பதை நோக்கமாக கொண்ட பரந்த திட்டங்களை நான்கு ஆய்வுகள் சோதித்தன. சேர்க்கப்பட்டிருந்த ஆய்வுகளில், திட்டங்களின் கால அளவு, ஆறு வாரங்கள் முதல் ஒரு வருடம் வரை பரவி இருந்தன. ஆறு ஆய்வுகளில், இந்த திட்டங்கள் சிகிச்சையின்மையோடும்; மூன்று ஆய்வுகளில், சில ஆதரவோடும்; மற்றும் இரண்டு ஆய்வுகளில், முழு பாரம்பரிய புனர்வாழ்வோடும் ஒப்பிடப்பட்டன.

முக்கிய முடிவுகள்

இணையம் மூலம் வழங்கப்பட்ட திட்டங்கள், இறப்பு விகிதங்கள் அல்லது எதிர்கால இதய அறுவை சிகிச்சையை குறைப்பதற்கு உதவும் என்பதற்கு, இன்றைய தேதி வரை எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், இந்த முடிவுகள் ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஆய்வுகளை அடிப்படையாக கொண்டவை. இந்த திட்டங்களால் கொழுப்பு அளவுகள், அல்லது இரத்த அழுத்தம் ஆகியவை பயனடைந்தன என்பதற்கும் இன்றைய தேதி வரை எந்த உறுதியான ஆதராமும் இல்லை. ஆரோக்கியம்-சார்ந்த வாழ்க்கைத் தரம் மற்றும் நடத்தை மாற்றம் ஆகியவை மேம்பட்டன என்று பரிந்துரைப்பதற்கு சிறிது ஆதாரம் உள்ளது, ஆனால் திடமான முடிவுகளை எடுக்க இன்றைய தேதி வரை போதுமான ஆதாரம் இல்லை. இணையம் மூலம் வழங்கப்பட்ட திட்டங்களால், மருந்து உட்கொள்ளலில் இணக்கத்தின் மீதான தாக்கத்தை ஆய்வுகள் இதுவரை அளவிடவில்லை. ஆரோக்கிய பராமரிப்பு பயன்பாடு, மற்றும் சிகிச்சை தலையீடுகளின் செலவு ஆகியவற்றின் மீது மிகவும் வரம்பிற்குட்பட்ட தகவல் உள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும் ஏழு ஆய்வுகளின் அறிக்கைகள் ஆதாரக் குழுமத்துடன் சேர்க்கப்படும்.

சான்றின் தரம்

பொதுவாக, ஆதாரத்தின் தரம் குறைவாக இருந்தது. சில ஒரு தலை சார்பு அபாய களங்களில், 'உயர் அபாய ஒரு தலை சார்பு' என்று மதிப்பிடப்பட்ட ஆறு ஆய்வுகளோடு, இணைக்கப்பட்டிருந்த ஆய்வுகள் ஓரளவு ஒரு தலை சார்பை கொண்டிருந்தன. ஆதலால், இந்த திறனாய்வின் முடிவுகளை கவனமாக பொருள் விளக்கம் கொள்ள வேண்டும்.

கரோனரி இதய நோய் சிகிச்சைக்கான இணையம்-சார்ந்த சிகிச்சை தலையீடுகளின் விளைவுகள் பற்றி தற்போது வரம்பிற்குட்பட்ட ஆதாரம் உள்ளது. தற்போது, ஏழு ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன என்று நாங்கள் அடையாளம் கண்டோம், அவற்றின் முடிவுகள் கிடைக்கப் பெறும் போது, அவற்றை இந்த திறனாய்வில் நாங்கள் இணைப்போம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information