Skip to main content

வளரிளம்பருவத்தினருக்கு ஏற்படும் 1ம் வகை வெல்லமுள்ள நீரிழிவு நோய்க்கு மெட்போமின் சேர்க்கப்பட்ட இன்சுலின் சிகிச்சை

வெல்ல நீரிழிவு என்பது இன்சுலின் சுரத்தல், இன்சுலினின் தொழிற்பாடு அல்லது இவை இரண்டிலும் ஏற்படும் குறைபாட்டால் தோன்றும் ஒரு அனுசேப பிரச்சனையாகும். இன்சுலின் எதிர்ப்பு (இன்சுலினானது இழையங்களில் வினைத்திறனாக இனிமேலும் செயற்படாதிருத்தல்) உருவாவதனால் போலும் அனுசேபக் கட்டுப்பாடானது (கிளைசீமிக் கட்டுப்பாடு, அதாவது கிளைக்கோசைலேற்றப்பட்ட ஈமோகுளோபின் A1C (Hb A1C) இதனால் அளக்கப்படும் நீண்டகால குருதி குளுக்கோசு மட்டங்கள்), 1ம் வகை வெல்ல நீரிழிவு நோய் கொண்ட சிறுவர்களில் பூப்படைதவின் போது பெரும்பாலும் சிதைவடைவதோடு அந்நோயாளிகளில் மாற்று சிகிச்சை திட்டங்களின் பாரிய தேவைப்பாட்டையும் உண்டாக்கியுள்ளது. நாங்கள் கட்டிளம்பருவத்தினரில் கிளைசீமிக் கட்டுப்பாடு, இன்சுலின் உணர்திறன், ஆரோக்கியம்சார் வாழ்க்கைத்தரம், பக்கவிளைவுகள் அதேபோல் உடல்நிறை மீதான பாதிப்புக்கள், குருதித்திரவ இழைய இலிப்பிட்டுக்கள் மற்றும் இன்சுலின் மருந்தினளவு என்பவை மீது 1ம் வகை வெல்ல நீரிழிவு நோய்க்கான மெற்போமின் சேர் இன்சுலின் சிகிச்சையின் பாதிப்புக்களை ஆராய்ந்த சிறந்த தரத்திலமைந்த எழுமாற்றான கட்டுப்பாட்டு ஆய்வுகளைத் தேடினோம்.
இரு ஆய்வுகளை (60 பங்குபற்றுனர்கள், மூன்று மாதகால சிகிச்சை) மாத்திரமே உள்ளடக்க முடிந்தது. இரு ஆய்வுகளும் மெற்போமினுடனான இன்சுலின் சிகிச்சையானது வெற்றுமருந்துடனான இன்சுலின் சிகிச்சையை விட ஓரளவிலேனும் Hb A1Cஅளவைக் குறைத்ததை கோடிட்டுக் காட்டின. எந்தவொரு ஆய்விலும் இன்சுலின் உணர்திறன், உடல்நிறை அல்லது குருதித்திரவ இழைய இலிப்பிட்டுக்கள் என்பவற்றில் முன்னேற்றம் காணப்படவில்லை. எவ்வாறெனினும், ஒரு ஆய்வானது இன்சுலின் மருந்தினளவில் 10% இனால் சிறிய குறைவொன்று ஏற்பட்டதைக் காட்டியது. இரு ஆய்வுகளிலும் பக்க விளைவுகளாக பெரும்பாலும் உணவுக்கால்வாய் பிரச்சனைகள் காணப்பட்டதோடு ஒரு ஆய்வில் வெல்லமட்டக் குறைவும் (குருதியில் வெல்லக் குறைவு) காணப்பட்டது. எந்தவொரு ஆய்விலும் ஆரோக்கியம்சார் வாழ்க்கைத்தரம், செலவுகள், உடல்நலக் குறைவு அல்லது இறப்பு பற்றி எந்த தகவல்களும் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பு: த.சஞ்சயன் மற்றும் சி.இ.பி.என்.அர்

Citation
Abdelghaffar S, Attia AM. Metformin added to insulin therapy for type 1 diabetes mellitus in adolescents. Cochrane Database of Systematic Reviews 2022, Issue 3. Art. No.: CD006691. DOI: 10.1002/14651858.CD006691.pub2.