எச்ஐவி மற்றும் பால்வினை தொற்றுக்களை தடுப்பதில் ஆணுறை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் சமூக-மட்ட தலையீடுகளின் திறன்

பின்னணி

1980-களில் எச்ஐவி/ எய்ட்ஸ் கொள்ளை நோய் வருகைக்கு பின்னர், எச்ஐவி மற்றும் பால்வினை தொற்றுக்கள் பரவுவதை தடுப்பதற்கு, ஆணுறை பயன்பாட்டின் ஊக்குவிப்பு மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் சிகிச்சைகளில் ஒன்றாக மாறிவிட்டது. எனினும், உலகளவில் ஆணுறை பயன்பாடு பரந்த அளவில் விளம்பரம் செய்யப்படுகிற போதிலும், எச்ஐவி மற்றும் பிற பால்வினை நோய்களால் பாதிக்கப்படுகிற புதிய நோயாளிகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும், மற்றும் சில குறிப்பிட்ட பகுதிகளில் மற்றும் அமைப்புகளில் இன்னும் உயர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. எச்ஐவி மற்றும் பிற பால்வினை நோய்கள் பரவுவதை குறைக்கும் பொருட்டு, மக்கள் வாழும் சூழலை மாற்றியமைப்பதன் மூலம் ஆணுறைகள் கிடைக்கும் வாய்ப்பு மற்றும் அதன் பயன்பாட்டை ஒரு பெரிய அளவில் மேம்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது. இந்த கோட்பாடு சரியானதா என்பதை மதிப்பிடுவதை இந்த திறனாய்வு நோக்கமாகக் கொண்டது.

முறைகள்

ஜனவரி 1980-ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 2014-ஆம் ஆண்டு வரையிலான அனைத்து தொடர்புடைய இலக்கியத்தையும் நாங்கள் திரையிடல் செய்தோம். இரண்டு சுயாதீன ஆசிரியர்கள் சோதனைகளை தேர்ந்தெடுத்து மதிப்பீடு செய்தார்கள்.

முடிவுகள்

75.891 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட மற்றும் ஒன்று முதல் ஒன்பது ஆண்டுகள் வரையிலான கால அளவுடைய ஒன்பது ஆய்வுகளை நாங்கள் பெற்றோம். இதில் ஏழு ஆய்வுகள், சப்-சஹாரா ஆப்பிரிக்காவிலும், மற்றொன்று பெருவிலும், இன்னொன்று பல நாடுகளிலும் நடத்தப்பட்டன. ஆணுறை விளம்பரம் அனைத்து ஆய்வுகளிலும் செயல்படுத்தப்பட்டது. இந்த குறிப்பிட்ட நடைமுறை சூழல்களில், ஆணுறை விளம்பரம் எச்ஐவி மற்றும் பிற பால்வினை தொற்றுக்கள் பரவுதலை குறைத்தது என்பதற்கான தெளிவான ஆதாரத்தை எங்களது முடிவுகளால் வழங்க முடியவில்லை. எனினும், ஆணுறை பயன்பாடு பற்றிய தகவல் அறிக்கைகளும் , எச்ஐவி மற்றும் பிற பால்வினை தொற்றுக்கள் பற்றிய அறிவும் அதிகரித்தது. பாலியல் நடத்தைகளை மாற்றுவது கடினமாக இருக்கிறபடியால், இந்த திறனாய்வின் எதிர்மறை முடிவுகளுக்கான ஒரு சாத்தியமான காரணமாக இருக்கலாம். உதாரணமாக, தலையீடு செயல்படுத்தப்பட்ட பின்னர், பாலியல் துணைகளின் எண்ணிக்கையில் நாங்கள் வேறுபாட்டை காணவில்லை. மேலும், ஆணுறைகளை நிலையாக பயன்படுத்தாவிட்டால் எச்ஐவி மற்றும் பிற பால்வினை தொற்றுக்கள் பரவுவதற்கான ஆபத்து தொடர்ந்து இருக்கிறது. ஆதாரத்தின் தரம் மிதமானதாக கருதப்பட்டது.

முடிவுரைகள்

இந்த தற்போதைய திறனாய்வில் உள்ள பெரும்பாலான ஆய்வுகள் மிகவும் மாறுபட்ட மற்றும் தனது பிராந்தியத்தின், சமூக மற்றும் கலாச்சார பண்புகளில் மற்ற வளரும் நாடுகளிலிருந்து வேறுப்பட்டு இருக்கிற சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டதால் எங்களது கண்டுபிடிப்புகளை எச்சரிக்கையுடன் பொருள் கொள்ளவேண்டும். இவ்வாறு, எங்கள் முடிவுகள் கட்டுப்படுத்தப்பட்ட பொதுத்தன்மையை முன்வைக்கின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information