பக்கவாதத்திலிருந்து பிழைத்தவர்கள் அவர்களின் சொந்த சமூகத்தில் நடமாட உதவும் சிகிச்சை தலையீடுகள்

திறனாய்வு கேள்வி

பக்கவாதத்திலிருந்து பிழைத்த வயது வந்தவர்களில் சமூக நடமாட்டத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தலையீடுகளின் விளைவு பற்றிய ஆதாரங்களை நாங்கள் திறனாய்வு செய்தோம்.

பின்னணி

பக்கவாதத்திலிருந்து பிழைத்தவர்களின் சமூக நடமாட்டத்தை மேம்படுத்துவதற்கு நோக்கம் கொண்ட திட்டங்கள் வழக்கமான சிகிச்சையை விட சிறந்ததா அல்லது மோசமானதா என்பதை முடிவெடுக்க நாங்கள் வேண்டினோம். சமூக நடமாட்டம் என்பது ஒரு நபர், தங்களின் சமுகம், வீட்டிற்கு வெளியே, மற்றும் உள்ளரங்குகள், தனியார் அல்லது பொது இடங்களில் நடக்கக் கூடிய திறனை குறிக்கிறது. சிலர், உடற்பயிற்சி செய்வதற்கு அல்லது பொழுதுபோக்கிற்கு நடப்பதை தேர்வு செய்வர் மற்றும் சமூக செயல்பாட்டின் ஒரு முக்கியமான அம்சமாக கருதி மற்றவர்களுடன் நடக்கக் கூடும். ஆதலால், சமூக நடமாட்டம் என்பது சமூகத்தில் வாழும், நடைத் திறன் பாதிக்கப்பட்டுள்ள பக்கவாதத்திலிருந்து பிழைத்தவர்களுக்கு ஒரு முக்கியமான திறனாக உள்ளது.

ஆய்வு பண்புகள்

இந்த திறனாய்வில் உள்ள ஆதாரம் நவம்பர் 2013 வரை தற்போதையானது. மொத்தம் 266 பங்கேற்பாளர்கள் கொண்ட ஐந்து ஆய்வுகளை நாங்கள் சேர்த்துள்ளோம். அனைத்து பங்கேற்பாளர்களும் சமுகத்தில் அல்லது ஒரு பராமரிப்பு வீட்டில் வாழும் பக்கவாதத்திலிருந்து பிழைத்த வயது வந்தவர்கள் ஆவர். சமூக நடமாட்டத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள், சமுகத்தில் பலவிதமான அமைப்புகள் அல்லது சூழல்களில் கொடுக்கப்பட்ட நடைபயிற்சியாகும் (மூன்று ஆய்வுகள்) அல்லது சமுக நடமாட்டத்தை ஒத்திருக்கும் உள்ளரங்கு நடவடிக்கையாக (மூன்று ஆய்வுகள்) கொண்டிருந்தது. மூன்று ஆய்வுகள், அரசாங்க முகமையங்களின் நிதியுதவியை பெற்றிருந்தன, மற்றும் இரண்டு ஆய்வுகளுக்கு எந்த உதவியும் இல்லை.

முக்கிய முடிவுகள்

'பங்கேற்பு' என்ற சொல், ஒரு நபருக்கு, பொழுதுபோக்கு நடவடிக்கைகள், சம்பளம் வழங்கப்பட்ட அல்லது தன்னார்வ வேலை, அல்லது மற்றவர்களுடன் பழகுவது போன்ற அவர்களுக்கு அர்த்தமுள்ளதாக கருதும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடிய திறனை குறிக்கிறது. பங்கேற்பின் முதன்மை விளைவிற்கு, கட்டுப்பாட்டை(இரண்டு ஆய்வுகள்) ஒப்பிடும்போது, தலையீடு பங்கேற்பை மேம்படுத்தியதா என்பதில் நாங்கள் நிச்சயமாக இல்லை. எவ்வளவு வேகமாக ஒரு நபர் நடக்கக் கூடும் என்பதை கருத்தில் கொள்ளும், ஒரு சமுக நடமாட்ட தலையீட்டினால் (நான்கு ஆய்வுகள்) நடை வேகம் அதிகரித்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. சேர்க்கப்பட்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில், நடக்கும் திறனின் மேல் தலையீட்டின் விளைவு, எவ்வளவு தூரம் மக்களால் ஆறு நிமிடங்களில் நடக்க முடியும் அல்லது நடப்பதின் மேலுள்ள அவர்களின் நம்பிக்கை ஆகியவை தெளிவாக தெரியவில்லை. சமூக நடமாட்ட தலையீடுகளின் விளைவை நிறுவ அல்லது நடைமுறை மருத்துவரீதியான மாற்றத்திற்கு ஆதரவளிக்க போதுமான சான்றுகள் எதுவும் தற்போது இல்லை. தலையீடுகளின் பாதகமான விளைவுகள் பற்றி சேர்க்கப்பட்டிருந்த எந்த ஆய்வுகளிலும் அறிவிக்கப்படவில்லை.

சான்றின் தரம்

பங்கேற்பு மற்றும் நடையின் வேகம் ஆகிய இரண்டு விளைவுகளுக்கு, ஆய்வுகள் இடையேயான ஆதாரத்தின் தரம் குறைவாக இருக்கும் என நாங்கள் கருதினோம். சில ஆய்வு வடிவமைப்பு பரிசீலனைகள், குறிப்பாக, பங்கேற்பாளர்கள் எந்த குழுவில் இருந்தனர் என்பதை தெரிந்தவர்கள் மற்றும் ஆய்வுகளிலிருந்து எத்தனை பேர் வெளியேறினர் ஆகியவை குறைந்தளவு மதிப்பெண்களுக்கு வழிவகுத்தது. மேலும், கண்டுபிடிப்புகளை விளக்கம் கொள்ளுதலை கட்டுப்படுத்தக் கூடிய சிறிய எண்ணிக்கையிலான ஆய்வுகளை நாங்கள் இந்த திறனாய்வில் சேர்த்தோம். இந்த பகுதியில், அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information