தண்டுவட காயத்திற்கு பிறகு, மக்களில் ஏற்படும் நாள்பட்ட வலிக்கான மருந்தை தவிர பிற சிகிச்சைகள்

தண்டுவட காயம் கொண்ட அநேக மக்கள் நாள்பட்ட வலியை உடையவர்களாய் இருக்கிறார்கள். வலி மருந்துகளைத் தவிர, பிற சாத்திய சிகிச்சைமுறைகள் பொதுவாக வழங்கப்படுகின்றன. மற்ற சிகிச்சை வகைகளுடைய திறன் மற்றும் சாத்தியமான பக்கவிளைவுகளைக் குறித்து கிடைக்க பெறும் ஆதாரத்தை தொகுத்தளிப்பதே இந்த முறைப்படுத்தப்பட்ட திறனாய்வின் நோக்கமாகும்.

மின்னணு தரவுத்தளங்களை மார்ச் 2011 வரை தேடி, மொத்தம் 616 பங்கேற்பாளர்களை கொண்ட 16 சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளை நாங்கள் கண்டறிந்தோம். இந்த ஆய்வுகளை, சிகிச்சை வகை மூலமாக நாங்கள் எட்டு பிரிவுகளாக பிரித்தோம். எட்டு ஆய்வுகள் மூளை தூண்டுதலைப் பற்றியதாகும், இவற்றுள் ஐந்து ஆய்வுகள் மின்னணுவையும், மூன்று ஆய்வுகள் காந்த தூண்டுதலையும் பயன்படுத்தியிருந்தன. உடற்பயிற்சி திட்டங்களைக் குறித்து மூன்று ஆய்வுகளும், குத்தூசி சிகிச்சையை குறித்து இரண்டு ஆய்வுகளும், மற்றும் சுய அறிதுயில் நிலை, டென்ஸ் சிகிச்சை மற்றும் ஒரு புலனறிவு நடத்தை சார்ந்த திட்டம் குறித்து ஒவ்வொன்றும் இருந்தன. சேர்க்கப்பட்ட்டிருந்த ஆய்வுகள், வலி மற்றும் பிற விளைவுகளை அளவிட பல்வேறு முறைகளை பயன்படுத்தியிருந்தன. ஒப்பீடு குழுக்களும் மாறுபட்டு, போலி தலையீடுகள், காத்திருப்போர் பட்டியல், வலிக்கான மற்ற சிகிச்சைகள் ஆகியவற்றை கொண்டதாய் இருந்தன.

கொடுக்கப்பட்டிருந்த எந்தவொரு வகை தலையீட்டிற்கும், ஒரு சில ஆய்வுகள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் அவை சிறு எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களை மட்டுமே சேர்த்திருந்தன. பெரும்பாலும், அறிக்கையிடப்பட்ட விவரங்கள் போதுமானதாக இல்லை. ஆய்வுகளின் ஒட்டுமொத்த தரம் குறைவாக இருந்தது. உதாரணமாக, பல ஆய்வுகள் காத்திருப்போர் பட்டியல் போன்ற பொருத்தமற்ற ஒப்பீடு குழுக்களை பயன்படுத்தியிருந்தன. இதன் விளைவாக, சிகிச்சைகளின் திறன் நிச்சயமற்றதாக உள்ளது. நவம்பர் 2014 ல் செய்யப்பட்ட ஒரு கூடுதல் தேடல், மேலும் சமீபத்திய ஆய்வுகளை கண்டறிந்தது, அவை இந்த திறனாய்வின் மேம்படுத்தலின் போது சேர்க்கப்படும்.

மண்டை ஒட்டினூடாக ஊடுசெல்லும் நேரடி மின்சார தூண்டுதல் (ட்ரான்ஸ் க்ரேனியல் டைரக்ட் கரண்ட் ஸ்டிமுலேசன், டிடிசிஎஸ் ) எனப்படும் ஒருவகை சிகிச்சைக்கு இரண்டு ஆய்வுகளின் முடிவுகளை சேர்க்கலாம். தொகுக்கப்பட்ட முடிவுகள், டிடிசிஎஸ் குறுகிய மற்றும் மத்திய காலத்தில் வலியை குறைக்கும் என்று கூறுகின்றன. மேலும், நாள்பட்ட தோள் வலிக்கான உடற்பயிற்சி திட்டங்கள் வலி நிவாரணத்தை அளித்தன. மீண்டும் மீண்டும் அளிக்கப்பட்ட மண்டை ஒட்டினூடாக ஊடுசெல்லும் காந்த தூண்டுதல், மூளை மின்னாற்றல் தூண்டுதல், குத்தூசி சிகிச்சை , சுய அறிதுயல் நிலை அல்லது டென்ஸ் முதலிய சிகிச்சைகள் ஆகியவை அந்தந்த கட்டுப்பாட்டு தலையீடுகளை விட நாள்பட்ட வலியை குறைப்பதில் சிறப்பாக இருந்தன என்பதற்கு எந்தவொரு ஆதாரத்தையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. தரவு குறைவாக இருந்ததால், வலியை தவிர பதட்டம், மனச்சோர்வு, அல்லது வாழ்க்கைத் தரம், அதே போல் நீண்ட கால பக்க விளைவுகள் போன்ற வேறு விளைவுகளை பற்றி எந்த ஒட்டுமொத்த முடிவுகளையும் எடுக்கமுடியவில்லை. சேர்க்கப்பட்டிருந்த ஆய்வுகள், நாள்பட்ட தண்டுவட வலிக்கு மருந்துகள் தவிர வேறு சிகிச்சைகள் பயனுள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் இருந்தனவா என்பதை குறித்து உறுதியான முடிவுகளை எடுக்க அனுமதிக்கவில்லை. இப்படிப்பட்ட சிகிச்சைகளின் பயன் மற்றும் பாதுகாப்பைக் குறித்து தீர்மானிக்க, கூடுதலான பங்கேற்பாளர்களை கொண்ட சோதனைகளும், மேம்படுத்தப்பட்ட தரத்தையுடைய ஆய்வுகளும் தேவையாக உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information