மாதவிடாய் நிறுத்தத்தின் குழலியக்க (மெனோபாஸ் வாசோமோட்டார்) அறிகுறிகளுக்கான உடற்பயிற்சி

திறனாய்வு கேள்வி : திடீர் உடல் வெப்பநிலை உயர்வுகள் (ஹாட் பிளஷ்சஸ்) உடைய மெனோபாசில் உள்ள பெண்களில் திடீர் வெப்பநிலை உயர்வுகள்/இரவு வியர்வை புழுங்கல்களை குறைப்பதற்கு உடற்பயிற்சி ஒரு திறன்மிக்க சிகிச்சையாக இருக்கக் கூடுமா?

பின்புலம் மெனோபாசில் உள்ள பெண்களில் பெரும்பாலானோர், திடீர் வெப்பநிலை உயர்வுகள்/இரவு வியர்வை புழுங்கல்களை எதிர்கொள்ளுவர் என்று ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.இந்த அறிகுறிகளுக்கு ஹார்மோன் சிகிச்சை மிகவும் திறன்மிக்க சிகிச்சையாக கருதப்படுகிறது. எனினும், ஹார்மோன் சிகிச்சைகள் சில எதிர்மறையான பக்க விளைவுகளோடு சாத்தியமான தொடர்பை கொண்டிருக்கின்றன என்று ஆய்வுகள் அறிக்கையிட்டுள்ளன. ஆதலால், அநேக பெண்கள் இதனை தவிர்த்து பிற மாற்று சிகிச்சைகளை தேடுகின்றனர்.ஆதலால், திடீர் வெப்பநிலை உயர்வுகள்/இரவு வியர்வை புழுங்கல்களின் தீவிரத்தை குறைக்க உதவும் வாழ்க்கை முறை மாற்றங்களை அடையாளம் காணுதல் அதிக முக்கியமாகுகிறது.இதன் மீதுள்ள மார்ச் 2014 வரை நிலவரப்படியான ஆதாரத்தை காக்ரேன் கூட்டமைப்பின் திறனாய்வு ஆசிரியர்கள் ஆராய்ந்தனர்.

ஆய்வு பண்புகள் திடீர் வெப்பநிலை உயர்வுகள்/இரவு வியர்வை புழுங்கல்களை அனுபவித்த 762 பெண்களை ஐந்து ஆய்வுகள் சீரற்ற முறையில் சிகிச்சை குழுக்களுக்கு ஒதுக்கீடு செய்தன. உடற்பயிற்சி மற்றும் கட்டுப்பாடு சிகிச்சை (மொத்தம் 454 பெண்கள்), உடற்பயிற்சி மற்றும் யோகா (மொத்தம் 279 பெண்கள்) என கூட்டு ஒப்பீடுகளுக்கு முறையே மூன்று மற்றும் இரண்டு ஆய்வுகள் இணைக்கப்பட்டன. ஹார்மோன் சிகிச்சையை உடற்பயிற்சியோடு ஒப்பிட்ட ஒரே ஒரு சிறிய ஆய்வு (14 பெண்கள்) இருந்தது.

முக்கிய முடிவுகள் சிகிச்சையின்மையோடு உடற்பயிற்சி ஒப்பிடப்பட்ட போது, திடீர் வெப்பநிலை உயர்வுகள் மீது அவற்றின் விளைவுகளில் எந்தவொரு வித்தியாசத்திற்கும் ஆதாரம் காணப்படவில்லை. உடற்பயிற்சியை விட ஹார்மோன் சிகிச்சை அதிக திறன் மிக்கதாக இருந்தது என்று ஒரு சிறிய ஆய்வு பரிந்துரைத்தது. யோகாவை விட உடற்பயிற்சி திறன் கொண்டதாக இருந்தது என்பதை காட்ட பற்றாக்குறையான ஆதாரமே உள்ளது. பாதக விளைவுகள் பற்றி மிக மிக குறைவான தரவே இருந்தது. குழுக்களிடையே பாதக விளைவுகளின் வித்தியாசத்திற்கு எந்த ஒரு சோதனையும் எந்த ஆதாரத்தையும் காணவில்லை.

சான்றின் தரம்: ஆய்வுகளின் செயல்முறையியல் தரம் வேறுபட்டு இருந்தன.கிடைக்கப்பெற்ற ஆதாரம் குறைவான தரம் கொண்டதென்று நாங்கள் மதிப்பிட்டோம்: ஆய்வு நடைமுறைகள் பற்றிய குறைவான அறிக்கை, நிலைப்பாடற்ற முடிவுகள் மற்றும் நுட்பமின்மை ஆகியவை பிரதான வரம்புகளாக கருதப்பட்டன .

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information