பக்கவாதத்திற்கு பின் ஏற்படும் மொழி சிரமங்களுக்கான பேச்சு மற்றும் மொழி பயிற்சி

திறனாய்வு கேள்வி

பக்கவாதத்திற்கு பின் மக்கள் சந்திக்கும் பேச்சு பிரச்சனைகளின் (பேச்சிழப்பு என அழைக்கப்படும்) மீது பேச்சு மற்றும் மொழி பயிற்சியின் (ஸ்பீச் அண்ட் லாங்குவேஜ் தெரபி, எஸ்எல்டி) விளைவுகளின் ஆதாரத்தை நாங்கள் திறனாய்வு செய்தோம்.

பின்புலம்

பக்கவாதத்தினால் அவதிப்படும் மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்களில் பேச்சிழப்பு ஏற்படும். பேசுதல், வாய் வழியான புரிதல், வாசித்தல் மற்றும் எழுதுதல் என ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தகவல் தொடர்பு வழிமுறைகள் பாதிக்கப்படலாம். பக்கவாதத்திற்கு பின்னான மீட்சியின் அனைத்து கட்டங்களிலும், பேச்சு மற்றும் மொழி பயிற்சியாளர்கள் பேச்சிழப்பை சோதித்து, அறுதியிட்டு மற்றும் சிகிச்சையும் அளிப்பர். அவர்கள், பேச்சிழப்பு ஏற்பட்ட நபர், அவரின் குடும்பம் மற்றும் பிற ஆரோக்கிய பராமரிப்பு தொழிமுறை வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றுவர். பேச்சிழப்பிற்கான எஸ்எல்டி திறன் மிக்கதா மற்றும் சிறப்பு-நிபுணத்துவம் அல்லாத சமூக ஆதரவை விட சிறப்பானதா என்பதை அறிய விரும்பினோம். எந்த விதமான அணுகுமுறைகள் சிறப்பான மீட்சியை அளித்தன என்பதை அறியவும் நாங்கள் விரும்பினோம்.

ஆய்வு பண்புகள்

இந்த ஆதாரம் செப்டம்பர் 2015 வரைக்கும் நிலவரப்படியானது. பேச்சிழப்பு கொண்ட 3002 மக்களை உள்ளடக்கிய 57 ஆய்வுகளை நாங்கள் கண்டு எங்கள் திறனாய்வில் இணைத்தோம். எஸ்எல்டி-யின் அனைத்து வகைகள், திட்டமுறைகள் மற்றும் வழங்கப்பட்ட முறைகளையும் நாங்கள் திறனாய்வு செய்தோம்.

முக்கிய முடிவுகள்

27 ஆய்வுகளின் ( பேச்சிழப்பு கொண்ட 1620 மக்களை உள்ளடக்கிய) அடிப்படையில், எந்த சிகிச்சைக்கான அணுகலும் இல்லாததை ஒப்பிடும் போது, மொழியை கையாளுதல், மொழியை புரிந்து கொள்ளுதல் (உதாரணத்திற்கு, வாசித்தல் மற்றும் கவனித்தல்) மற்றும் மொழியை உண்டாக்குதல் (பேசுதல் அல்லது எழுதுதல்) ஆகியவற்றில் பேச்சு மற்றும் மொழி பயிற்சி பயனளித்தது. எனினும், இந்த பயன்கள் எத்தனை காலம் நீடிக்கக் கூடும் என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை.

எஸ்எல்டி மற்றும் சமூக ஆதரவை ஒப்பிடுவதற்கு சிறிதளவு விவரமே உள்ளது. மொழித்திறனின் மதிப்பீடுகளில் மிக குறைந்த வித்தியாசமே இருக்கக் கூடும் என்று ஒன்பது சோதனைகளில் (பேச்சிழப்பு கொண்ட 447 மக்கள்) உள்ள விவரம் பரிந்துரைக்கிறது. எனினும், எஸ்எல்டி சிகிச்சையில் பங்கேற்றவர்களைக் ஒப்பிடும் போது சமூக ஆதரவில் பங்கேற்பதை அதிகமான மக்கள் நிறுத்திக் கொண்டனர்.

முப்பத்தி-எட்டு ஆய்வுகள் ( பேச்சிழப்பு கொண்ட 1242 மக்களை உள்ளடக்கிய) இரண்டு வகையான எஸ்எல்டி-ஐ ஒப்பிட்டன. எஸ்எல்டி-ஐ ஒப்பிட்ட ஆய்வுகள், சிகிச்சை திட்டமுறை (தீவிரம், அளவு மற்றும் காலம்), வழங்கப்படும் முறைகள் (குழு, ஒற்றைக்கு-ஒற்றை நபர், தன்னார்வலர், கணினி-முறை), மற்றும் அணுகுமுறை ஆகியவற்றில் வேறுப்பட்டிருந்தன. இந்த ஒப்பீடுகளின் மீது நமக்கு மேலும் அதிகமான தகவல் தேவைப்படுகிறது. குறுகிய-கால சிகிச்சையை விட அதிகமான (அதிக தீவிர) சிகிச்சை மணி நேரங்கள் பங்கேற்பாளரின் அன்றாட வாழ்வில் மொழியின் பயன்பாட்டிற்கு உதவி செய்து மற்றும் அவர்களின் பேச்சிழப்பு பிரச்னைகளின் தீவிரத்தை குறைப்பதாக தெரிகிறது. எனினும், குறைந்த தீவிர சிகிச்சை திட்டத்தை கொண்டவர்களைக் காட்டிலும் இத்தகைய தீவிர சிகிச்சைகளில் (வாரம் 15 மணி நேரம் வரை) பங்கேற்பதை அதிகமான மக்கள் நிறுத்திக் கொண்டனர்.

சான்றின் தரம்

பொதுவாக, நடத்தப்பட்ட மற்றும் அறிக்கையிடப்பட்ட ஆய்வுகளின் தரம் இன்னும் மேம்படுத்தப்படலாம். முக்கியமான தரம் சார்ந்த அம்சங்கள் சமீப கால சோதனைகளில் பாதியில் மட்டுமே பதிவிடப்பட்டுள்ளன. ஆதலால், மோசமாக நடத்தப்பட்ட ஆய்வுகள் காரணமாக அல்லது மோசமாக அறிக்கையிடப்பட்ட ஆய்வுகள் காரணமாக இந்த முடிவுகள் ஏற்பட்டனவா என்பது தெளிவாக இல்லை. நாங்கள் செய்த பெரும்பான்மையான ஒப்பீடுகள், அதிகமான பேச்சிழப்பு கொண்ட மக்களை உள்ளடக்கிய அதிகமான ஆய்வுகள் கிடைக்க பெறுவதன் மூலம் மேலும் பயனளிக்க கூடும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information